கோவையில் ‘ஹண்ட் பாஃர் டேலண்ட்’ சைக்கிள் போட்டி

நேரு கல்வி குழுமம், கோயம்புத்தூர் மாவட்ட அமச்சூர் சைக்கிளிங் அசோசியேசன் மற்றும் கோவை பெடலர்ஸ் சைக்கிளிங் கிளப் சார்பில் ஹண்ட் பாஃர் டேலண்ட் சைக்கிள் போட்டி கோவைப்புதூர் பகுதியில் நடைபெற்றது.

இதில் 6 வயது குழந்தைகள் முதல் 23 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டார்கள். போட்டிகள் 8 பிரிவுகளாக நடைபெற்றன. போட்டியில் மொத்தம் 500 குழந்தைகள், ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

மேலும் போட்டியின் சிறப்பாக ஆறு சிறப்பு குழந்தைகள் கலந்து கொண்ட 400 மீட்டர் தூரம் போட்டி நடைபெற்றது. பெற்றோர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஸ்லோ சைக்கிள் போட்டியும் நடைபெற்றது.

இந்த போட்டிக்கு சிறப்பு விருந்தினராக கோவைப்புதூர், தமிழ்நாடு சிறப்பு காவல் பட்டாலியன் 4 பிரிவின் கமாண்டன்ட் செந்தில் குமார் கலந்து கொண்டு போட்டிகளை கொடியசைத்து துவக்கிவைத்து பேசியதாவது: இந்த சைக்கிள் போட்டி ஒரு சிறந்த உடற்பயிற்சி. இது போலவே நீச்சல் பயிற்சியும் நல்ல உடற்பயிற்சி. இப்பொழுது கலாச்சாரம் மிகவும் மாறிவிட்டது. முன்பு எல்லாம் இலவட்ட கல் தூக்குவது போன்ற பாரம்பரிய போட்டிகள் நிறைய நடைபெற்றது. ஆனால், இப்போழுது குழந்தைகள் செல் போனில் தான் தனது பொழுதை செலவிடுகின்றன. இவர்கள் மனதை மாற்றி சைக்கிள், நீச்சல் உட்பட பல்வேறு போட்டிகளில் ஈடுபட்டால் அவர்களின் எதிர்காலம் மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்று பேசினார்.

போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக முதல் பரிசாக ரூபாய் 3 ஆயிரம், இரண்டாம் பரிசாக 2 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசாக ஆயிரம் ரூபாய் என மொத்தம் 1 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் அனைவருக்கும் பதக்கம், சான்றிதழ், டி-சர்ட், மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

விழாவிற்கு கோவை நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரியும் செயலாளருமான கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார்.