மின் கட்டண உயர்வால் பம்புசெட்டு தொழிற்சாலைகள் மூடும் நிலை

– நடவடிக்கை எடுக்க சீமா கோரிக்கை

தொழில் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மின் கட்டண உயர்வை மீண்டும் ஆய்வு செய்து தொழிற்சாலைகளுக்கு எப்பாதிப்பும் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (சீமா) தலைவர் விக்னேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்த பத்திரிக்கை செய்தியில் அவர் கூறியிருப்பதாவது: நாட்டின் பம்ப் உற்பத்தியில் 55% உற்பத்தி கோவை பம்ப்செட் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களால் உற்பத்தி செய்யப்படுகிறது.

கோவைக்கு அடுத்த பெரிய பம்ப்செட்டுகள் உற்பத்தி மையமாக திகழ்வது குஜராத்தில் உள்ள அகமதாபாத், ராஜ்கோட் நகரங்கள் ஆகும். அங்கு ஸ்டீல் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளதால் பம்ப்செட் உற்பத்திக்குத் தேவையான ஸ்டீல் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் எளிதாகவும் குறைந்த விலையிலும் கிடைக்கப்பெறுகிறது.

அதுமட்டுமல்லாமல் குஜராத்தில் அமைந்துள்ள கப்பல் உடைப்பு மையங்கள் மூலம் பவுண்டரிகளுக்குத் தேவையான ஸ்க்ராப்பும் குறைந்த விலையில் கிடைக்கிறது. இக்காரணங்களால் பம்ப்செட் தயாரிப்புக்குத் தேவையான பாகங்கள் கோவையை விட 10% குறைந்த விலையில் கிடைக்கப்பெறுகிறது. ஆதலால் அவர்களின் பம்ப்செட்டுகளும் குறைந்த விலையில் சந்தைப்படுத்தப்படுகிறது.

இப்போட்டியை கோவையின் உயர்ந்த தரத்தினால் நமது தயாரிப்பாளர்கள் சமாளித்து வருகின்றனர். நாட்டின் உற்பத்தியில் 80% ஆக இருந்த பங்களிப்பு இக்காரணத்தினால் 55% ஆக குறைந்துள்ளது.

பம்ப்செட்டுகளுக்கான GST-யும் 12% லிருந்து 18% ஆக உயர்ந்துள்ளது. இது நமது தயாரிப்பாளர்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சூழலில், தற்போது தமிழக மின்சார வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 20% லிருந்து 52% வரையிலான மின் கட்டண உயர்வு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக பெருவாரியான பவுண்டரிகள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயன்படுத்துகின்ற LT (குறைந்தழுத்த) க்கான அதிக பயனீட்டளவு கட்டணம், உயர்ந்த பயனீட்டு நேரம், மின் பயன்பாட்டு கட்டண உயர்வு ஆகியவற்றால் பவுண்டரிகள் மற்றும் பம்ப் பாகங்கள் உற்பத்தி செலவு அதிகரிக்கும். பம்ப் உற்பத்திக்குத் தேவையான பாகங்களின் போக்குவரத்துச் செலவுடன் கூடிய விலை குஜராத்தில் இருந்து வரவழைப்பது குறைவாக இருக்கும்.

இதனால் இங்குள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர பம்புசெட்டு பாகங்கள் தயாரிப்பாளர்கள் தங்கள் தொழில்சாலைகளை மூடும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். மேலும், பம்புசெட்டு உற்பத்திச் செலவின் வித்தியாசமும் 15 சதவீதம் வரை அதிகரிக்கும். நமது பம்ப்செட்டுகளின் உற்பத்தி பங்கு 55% லிருந்து மேலும் குறையும்.

தொழில் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இக்கருத்துக்களைக் கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை மீண்டும் ஆய்வு செய்து தொழிற்சாலைகளுக்கு எப்பாதிப்பும் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.