உலகின் மிகச்சிறந்த பேக்ஹோ லோடர் ‘புல் சூப்பர் ஸ்மார்ட்’ இயந்திரம் அறிமுகம்

நாட்டின் முன்னணி பேக்ஹோ லோடர் இயந்திர தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான புல் மெஷின்ஸ் பிரைவேட் லிமிடெட் தனது புதிய மாடலான ‘புல் சூப்பர் ஸ்மார்ட்’ என்ற இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

கோவை சூலூர் காங்கேயம் பாளையத்தில் அமைந்துள்ள இந்த நிறுவனம் ட்ராக்டரோடு இணைக்கப்படும் உபகரணங்கள், கட்டுமான துறைக்கான இயந்திரங்கள் மற்றும் மின்சாரத்தால் இயங்கும் இயந்திரங்கள் என மூன்று வகையான இயந்திரங்களை உற்பத்தி செய்து வருகிறது.

இந்நிறுவனம் 1997 இல் ஆரம்பிக்கப்பட்டது. 2011 இல் பேக்ஹோ லோடர் இயந்திரத்தையும், 2014 இல் புல் ஹெச்.டி இயந்திரத்தையும் அறிமுகம் செய்தனர்.

இங்கு தயாரிக்கப்படும் இயந்திரங்கள் உள்நாடு தவிர 55 நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தற்போது புல் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட சூப்பர் ஸ்மார்ட் மாடலை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் 75 hp கிர்லோஸ்கர் இஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் இதில் பொருத்தப்பட்டுள்ள பிஸ்டன் பம்ப் தேவையான அளவு மட்டுமே சக்தியை உபயோகிக்கும் வண்ணம் மின்னணு முறையில் வடிவமைக்கப்பட்டு செயல்படுகிறது. இதன் காரணமாக எரிபொருள் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டு பெருமளவு டீசலும் மிச்சப்படுத்தப்படுகிறது.

பேக்ஹோ லோடர் உற்பத்தியில் இந்த நிறுவனம் இந்தியாவிலேயே மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து புல் மெஷின்சின் நிர்வாக இயக்குனர் பார்த்திபன் வரதராஜன் கூறியதாவது:
புல் நிறுவனத்தின் புதிய பேக்ஹோ லோடர் சூப்பர் ஸ்மார்ட் மாடலை அறிமுகப்படுத்தி உள்ளோம். இதை உற்பத்தி செய்வதில் பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், இதை கோவையில் வடிவமைத்து, 55 நாடுகளில் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு புல் நிறுவனம் வளர்ச்சி அடைந்துள்ளது.

மின்னணு முறையில் வடிவமைக்கப்பட்டு செயல்படுவதால், எரிபொருள் சிக்கனம் அதிகமாக இருக்கும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு மாதம் ரூ.30,000 அளவில் எரிபொருள் செலவு மிச்சமாகும்.
இது உலகின் மிகச்சிறந்த பேக்ஹோ லோடர் இயந்திரம் என உறுதியளிக்கிறோம்.

இதுபோன்ற இயந்திரங்களுக்கு மிகச்சிறந்த எதிர்காலம் உள்ளது.
புல் நிறுவனத்தின் விற்பனை இந்தியாவில் 60 சதவீதமும் வெளிநாடுகளில் 40 சதவீதமும் உள்ளது.
மேலும் தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா போன்ற நாடுகளில் மிகப்பெரிய டீலர்கள் உள்ளனர்.

ஒரு மாதத்தில் 400 வாகனங்களை இங்கு தயாரிக்க முடியும். தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இயந்திரத்தில் குளிர்சாதன வசதியுடன் கூடிய ஓட்டுனர் கூண்டு உள்ளதோடு, அதிக வலுவையும், அழுத்தத்தையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என கூறினார்.

இதன் அறிமுக விழாவில் புல் மெஷின்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் தலைவர் ஏ.வி. வரதராஜன், இயக்குனர் ரம பிரியா, டீலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.