அதிநவீன எஃப்.எம்.ஆர்.ஐ ஸ்கேன் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் அறிமுகம்

மூளையின் பகுதிகளைத் துல்லியமாக காட்சிப்படுத்தும், அதிநவீன எஃப்.எம்.ஆர்.ஐ ஸ்கேன் வசதி தென் தமிழகத்தில் முதன்முறையாக கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வழக்கமான மனித செயல்பாட்டுக்கு மூளையின் சில பகுதிகள் மிகவும் அத்தியாவசியமானவை. அதே சமயம் சில பகுதிகளை அறுவை சிகிச்சை மூலம் பாதுகாப்பாக அகற்றிவிடமுடியும். ஒரு கட்டியை அகற்றும்போது அல்லது கைகால் வலிப்புக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது இது முக்கியத்துவம் பெறுகிறது.

எம்.ஆர்.ஐ, சிடி முதலான வழக்கமான இமேஜிங் முறைகளால் இப்பகுதிகளை துல்லியமாக காட்சிப்படுத்த இயலாது. ஒரு முக்கிய பகுதியில் ஏதேனும் காயமேற்பட்டால், அதனால் நோயாளிக்கு பக்கவாதம் ஏற்படலாம். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக வழக்கமான எம்.ஆர்.ஐ ஸ்கேன் உடன் அதிநவீன கம்ப்யூட்டர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஸ்கேன் எடுக்கப்படுகிறது. அப்போது முக்கியமான பகுதிகள் தெளிவாக வரையறுக்கப்படுகின்றன. கை, கால், பேச்சு முதலான முக்கிய உடல்பகுதி செயல்பாடுகளுக்கு காரணமான பகுதிகளை துல்லியமாக அடையாளம் கண்டறியும் அதிநவீன முறையே ஃபங்ஷனல் எஃப்.எம்.ஆர்.ஐ (Functional MRI –fMRI) என்றழைக்கப்படுகிறது

ஒரு நோயாளிக்கு மூளை அறுவை சிகிச்சைக்கு முன்னதாக அது அவருக்கு எந்த அளவுக்கு ஆபத்தை விளைவிக்கலாம் என்பதை அறிந்துகொள்வதற்காக மருத்துவர்களும் அறுவை சிகிச்சை நிபுணர்களும் எஃப்.எம்.ஆர்.ஐ ஸ்கேனை பயன்படுத்துகின்றனர். உடல் இயக்கம், மொழி முதலான முக்கிய செயல்பாடுகளுடன் தொடர்புடைய பகுதிகளை அடையாளம் காண இது பெரிதும் உதவுகிறது.

வழக்கமான ஸ்கேனைப் போலவே இந்த அதிநவீன ஸ்கேனும் பாதுகாப்பானது, இதில் கதிர்வீச்சு எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை. படங்களை துல்லியமாகப் பார்ப்பதற்கு ஒரு பிரத்யேக மானிட்டர் உள்ளது. மேலும் எஃப்.எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கும்போது கை கால் அசைப்பது, படங்கள் பார்ப்பது, ஒலிகள் கேட்பது, எளிமையான கேள்விகளுக்கு பதில் அளிப்பது ஆகிய செயல்பாடுகள் நோயாளிகளுக்கு அளிக்கப்படுகின்றன

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் டாக்டர் ஸ்ரீராம் வரதராஜன் தலைமையில் நரம்பியல் கதிரியக்க சிகிச்சை துறை செயல்படுகிறது. மூளை கட்டி மற்றும் கை கால் வலிப்பு நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைக்கு முன்பாக அளிக்கப்படும் இந்த முழுமையான எஃப்.எம்.ஆர்.ஐ ஸ்கேன் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அதிநவீன மருத்துவ சேவை அளித்திடும் இப்பகுதியின் முதலாவது மருத்துவமனை கே.எம்.சி.ஹெச் என்பதும், தென்னிந்தியாவின் ஒரு சில மருத்துவ மையங்களில் ஒன்றும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பல்வேறு சிறப்பு மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு அவர்கள் சிறந்த முறையில் மருத்துவ சேவை ஆற்றுவதற்கு உதவிகரமாக பிரத்யேக துணை மருத்துவப் பிரிவுகளை உருவாக்கும் இந்தியாவின் ஒரு சில கார்ப்பரேட் மருத்துவமனைகளில் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையும் ஒன்று என்று கதிரியக்க சிகிச்சை துறை தலைவர் டாக்டர் மேத்யூ செரியன் குறிப்பிட்டார்.

கிளினிக்கல் நியூரோ சயின்ஸ் துறையில் இதுவோர் முக்கியமான மைல்கல் நிகழ்வு என்று கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி பெருமையுடன் தெரிவித்தார். இத்தகைய அதிநவீன மருத்துவ வசதியை இந்த பிராந்தியத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தியதின் மூலம் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை முன்னுதாரணமாகத் திகழ்வது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

இந்த அதிநவீன மருத்துவ வசதியை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுத்த செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் அளிக்கப்படும் நரம்பியல் அறுவை சிகிச்சைகள் மேற்கு நாடுகளின் சிறந்த மருத்துவமனைகளுடன் ஒப்பிடும் அளவுக்கு தரமானவை என்று குறிபிட்டார்.