கருணாநிதி எனும் ‘பராசக்தி’

Paraasakthi

ஓர் அரசியல்வாதி என்று அறியப்பட்டாலும், அதையும் தாண்டி கவிஞர், பாடலாசிரியர், நாடக நடிகர், எழுத்தாளர், பத்திரிகையாளர், கார்ட்டூனிஸ்ட் என்று பல முகத்தன்மை கொண்டு அனைத்திலும் தனது முத்திரையை பதித்த ஒரு ஆளுமைதான் கலைஞர் மு கருணாநிதி. விரும்பியோ, விரும்பாமலோ கடந்த ஐம்பது ஆண்டு கால தமிழக அரசியல் என்பது அவரைச் சுற்றித்தான் நிகழ்ந்து வந்தது. அவரை எதிர்த்தோ, ஆதரித்தோ தான் நடைபெற்று வந்துள்ளது. தனிப்பட்ட முறையில் கிட்டத்தட்ட எண்பதாண்டு கால பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர்.

தமிழக அரசியல் மட்டுமின்றி இந்திய அரசியலிலும் தனது பங்களிப்பை மிகச்சரியாகச் செய்தவர். பல வகையிலும் அனைவரும் மதிக்கத்தக்க மதிநுட்பம் மிகுந்த அரசியல் நடத்தியவர். வெற்றியோ, தோல்வியோ எதுவென்றாலும் தொடர்ந்து அரசியல் களத்தில் நின்று போராடியவர். பலநேரங்களில் அவர் கொண்டிருந்த கொள்கைக்காக தேர்தல் அரசியலில் பல தோல்விகளை சந்தித்ததுண்டு; ஆனால் அந்த அரசியல் லாபத்துக்காக என்றும் தன்னை விட்டுக்கொடுத்தது இல்லை. தமிழ் மொழி மீது மாறாத பற்றுக்கொண்டிருந்தவர். அதனை பல வகையிலும் வெளிப்படுத்தியவர். ஒரு நீண்டகால பொது வாழ்வுக்குப் பிறகு அவரே சொன்னது போல மரணம் அவருக்கு ஓய்வு கொடுத்திருக்கிறது.

அவர் அரசியலுக்கு வந்த காலத்தில் தமிழக அரசியல் வானில் மூதறிஞர் இராஜாஜி, தந்தை பெரியார், தீரர் சத்திய மூர்த்தி, அறிஞர் அண்ணா போன்ற நட்சத்திரங்கள் ஒளி வீசிக்கொண்டிருந்த நேரம். எந்த விதமான பெரிய பின்புலமும் இல்லாமல் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து பள்ளிப்படிப்பு மட்டுமே படித்த கருணாநிதி தந்தை பெரியார் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அறிஞர் அண்ணாவால் கவரப்பட்டு திராவிட இயக்கத்தில் ஈடுபடத்தொடங்கினார். எழுத்து, பேச்சு என்று தன்னை படிப்படியாக தகுதி படித்துக்கொண்ட அவர் விரைவிலேயே அரசியல் மேடைகளில்  நாடறிந்த பேச்சாளரும், எழுத்தாளரும் ஆனார். அவருடைய இன்னொரு சிறப்பான திறனாக திரைப்படத்துறை அவரை நன்கு அடையாளம் காட்டியது. அங்குதான் அவர் எம்ஜிஆரை நண்பராகப்பெற்றார்.

எழுத்து, பேச்சு, அரசியல் அறிவு, என்ற எல்லாவற்றையும் தாண்டி அவரது இறுதிக்காலம் வரை அவரை உயிர்ப்புடன் வைத்திருந்தது அவரது போராட்ட குணமாகும். அதனால்தான் அவரால் அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை ஐம்பதாண்டு காலம் வழிநடத்த முடிந்தது. பதிமூன்று சட்டமன்ற தேர்தல்களில் தோற்காமல் வெற்றி பெற முடிந்தது. ஐந்து தடவை முதலமைச்சராக முடிந்தது. அவசர நிலை பிரகடனம், எம்ஜிஆர் கட்சியில் இருந்து பிரிந்தது, ஆட்சியில்லாமல் பதிமூன்று ஆண்டுகள் வெறும் அரசியல்வாதியாக இருந்தது, வைகோவின் பிரிவு என்று பலமுனைகளிலும் தாக்குதல்கள் வந்த போதும் கலங்காமல் கட்சியை கட்டிக்காப்பாற்றியவர்.

அதைப்போலவே முதலமைச்சராக ஆட்சியில் இருந்த காலகட்டங்களில் அவர் அறிமுகப்படுத்திய பல திட்டங்கள் போற்றத்தக்கவையாகும். ஏழை மக்களின் உயர்வுக்காகக் கொண்டுவரப்பட்ட குடிசை மாற்றுவாரியம், கைரிக்ஷா ஒழிப்பு, இட ஒதுக்கீடு, பேருந்து அரசுமயமாக்கல், பிச்சைக்காரர் மறுவாழ்வு திட்டங்கள், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் சமத்துவபுரம் என்று பலவும் இன்னும் அவர்  செய்த சாதனைகளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றன.

தமிழ் மீது நீங்காத பற்று கொண்டிருந்தவர்.  இந்தி நுழைகிறது என்ற அறிவிப்பு கேட்டு எதிர்த்துப் போராடியவர். தமிழ் திரைப்படங்களில் வசனங்களில் புது டிரெண்டை உருவாக்கியவர். சங்கத்தமிழ், குறளோவியம், தொல்காப்பியம் என பழந்தமிழ் இலக்கியங்களை மறு அறிமுகம் செய்தவர். அவை போக ரோமாபுரி பாண்டியன் தொடங்கி, பொன்னர் சங்கர் வரை பல புதினங்களையும், பல சிறுகதைகளையும், கட்டுரைகளையும் தமிழுக்கு வழங்கியவர். சென்னையில் வள்ளுவருக்கு வள்ளளுவர் கோட்டத்தையும், கன்னியாகுமரியில் 133 அடி உயர சிலையும் செய்து வழங்கியவர். கோவையில் உலகச் செம்மொழி மாநாடு நடத்தியவர்.

தமிழக சட்டமன்றத்துக்கு பதிமூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டு திறம்பட செயலாற்றியவர். நாகரிகமான சொல்லாடல்களுக்கும், அடுத்தவரை மதிக்கின்ற குணமும், சட்டமன்ற நடவடிக்கைகளில் அவருக்கு இருந்த பாண்டித்தியமும் அவரை ஒரு சிறந்த சட்டமன்ற வியலாளராக இயங்கச் செய்தது. அதைப்போலவே மாநில சுயாட்சி குறித்த விவகாரத்தில் மாநிலத்தின் உரிமைகளுக்காகப் பல முறை போராடியவர். சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றும் உரிமையை மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட முதலமைச்சருக்கு வாதாடி பெற்றுத்தந்தவர். இன்றும் இந்தியா முழுவதும் உள்ள மாநில முதலமைச்சர்கள் அதனை நிறைவேற்றி வருகிறார்கள்.

தமிழ்த்திரைப்படங்களில் ஒரு தனியிடத்தை தனது வசனங்களால் பெற்றவர். ராஜகுமாரி தொடங்கி பொன்னர் சங்கர் வரை பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர். அது போக பல திரைப்படப் பாடல்களுக்கும் அவர் சொந்தக்காரர். திரைத்துறையோடு, பத்திரிகைத் துறையிலும் அவரது முத்திரை உண்டு. கையெழுத்து பத்திரிகை தொடங்கி, பிறகு குடியரசுப் பத்திரிகையில் பயிற்சி பெற்றவர், முரசொலியின் நாயகன் ஆனார். அதில் அவர் உடன் பிறப்புகளுக்கு எழுதிய கடிதங்கள் ஒருபுறம் அரசியல் என்றாலும் இன்னொரு புறம் இலக்கியமாகவும் பார்க்கப்படுகிறது. பதவி இல்லாத காலங்களிலும் தொண்டர்களை கட்சியிலேயே கட்டிப்போட்ட வல்லமை அவரது எழுத்துக்கு இருந்தது.

பல பத்தாண்டுகள் தொடர்ந்து செய்ய வேண்டிய பணியை தனது ஒரு வாழ்நாளில் எவ்வாறு செய்து முடித்தார் என்பது அவரது வாழ்வு மற்றவர்களுக்குத் தரும் செய்தியாக எடுத்துக்கொள்ளலாம். அவர் பத்திரிகைகள் படிக்காத நாள் என்பதே இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அவரது நினைவாற்றல், தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை அனைவரிடமும் பழகும் இனிய தன்மை ஆகியவை எல்லாம் சேர்ந்து அவரை ஒரு காந்தசக்தி மிக்க மக்கள் தலைவராக அவரை மாற்றின.  எல்லாவற்றிலும் முதலில் வருவது அவரது இடைவிடாத கடும் உழைப்பு. அதில் அவரை மிஞ்ச இந்தியாவிலேயே யாரும் இல்லை என்றே தோன்றுகிறது. காலை நான்கு மணி முதல் இரவு பத்து மணி வரை தன்னை படிப்பு, எழுத்து, பேச்சு என்ற உயிர்ப்புடன் வைத்துக்கொண்டவர்.

ஓய்வறியா சூரியனாக தொண்ணூற்று நான்கு வயது வரை வலம் வந்த கலைஞர் மு கருணாநிதி மறைந்த தமிழகத்துக்கு பேரிழப்பு என்பதை காலம் எடுத்துரைக்கும். அதற்கேற்றாற் போலத்தான் அவரது உடல் வைத்திருந்த பேழையில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் நினைவூட்டுகின்றன. ஓய்வு இல்லாமல் உழைத்தவன் இதோ இங்கே ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறான்.