பி.எஸ்.ஜி மருத்துவமனையில் ‘காமதேனு’ தாய்ப்பால் மையம் துவக்கம்

பி.எஸ்.ஜி மருத்துவமனையின் குழந்தைகள் நலதுறை, உலக தாய்ப்பால் வார தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கான தாய்ப்பால் வங்கி மையத்தை தொடங்கியுள்ளது.

இதனை பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் பிருந்தா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

இதில், பி.எஸ்.ஜி மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் புவனேஸ்வரன், மருத்துவக் கல்லூரி முதல்வர் சுப்பாராவ், குழந்தைகள் நலதுறை தலைவர் டாக்டர் ரமேஷ், தாய்ப்பால் ஊட்டுவதற்கான மருத்துவ ஆலோசகர் டாக்டர் மஞ்சரி, உதவி குழந்தைகள் மருத்துவர் சுமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து டாக்டர் ரமேஷ் கூறுகையில்: உடல்நலம் சரியில்லாத பச்சிளம் குழந்தைகளின் நலனுக்காக தாய்ப்பால் வங்கியை துவங்கியுள்ளோம். குழந்தைகளுக்கு தாய்ப்பால் தான் ஊட்டசத்து மிக்க உணவு. ஆனால் சில குழந்தைகளுக்கு தாய்மார்களிடம் இருந்து தாய்ப்பாலை பெற்றுக் கொள்ள முடியாத சூழல் உள்ளது. இதற்கு ஒரு மாற்று ஏற்பாடாக தான் இந்த வங்கியை ஆரம்பித்துள்ளோம். இதில் பிற தாய்மார்களிடம் இருந்து பாதுகாப்பான முறையில் பால் தானமாக பெறப்பட்டு, சேமித்து வைக்கப்படுகிறது. மேலும், அவை பாதுகாப்பானதா என செயல்முறைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே குழந்தைகளுக்கு வழங்கப்படும்.

முதற்கட்டமாக பி.எஸ்.ஜி மருத்துவமனையில் ஐ.சி.யூ.,வில் இருக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்கப்படும். பின்னர் நாளடைவில் இப்பகுதியில் இருக்கும் பிற மருத்துவமனைகளில் தாய்ப்பால் தேவைப்படும் குழந்தைக்கும் வழங்கப்படும்.

உடல்நலமில்லமால் ஐ.சி.யூ.,வில் உள்ள குழந்தைகள், குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகள், எடை குறைவாக பிறந்த குழந்தைகளுக்கு ஆரம்ப நிலையில், ஜீரண சக்தி பலவீனமாகி இருக்கும். அவர்களுக்கு தாய்ப்பால் வழங்கும்போதே ஆரோக்கியம் கிடைக்கும். மேலும், தாய்ப்பால் செயல்முறைக்கு உட்படுத்தப்படுவதால், இங்கு சேவை கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுவதாக தெரிவித்தார்.