வரும் 8 ஆம் தேதி முதல் கோவை டூ திருப்பதி தினசரி சுற்றுலா துவக்கம்

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் கோவையில் இருந்து திருப்பதிக்கு தினசரி சுற்றுலாத் திட்டம் ஆகஸ்டு 8 ஆம் தேதி முதல் தொடங்குவதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் சென்னையில் இருந்து திருப்பதிக்கு தினசரி சுற்றுலாத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் பொது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளாா்.

அதன்படி, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் கோவையில் இருந்து திருப்பதிக்கு தினசரி சுற்றுலாத் திட்டம் வரும் ஆகஸ்டு 8-ந் தேதி முதல் செயல்படுத்தப்படுகிறது.

7 நாள்களுக்கு முன்பு இந்த சுற்றுலாத் திட்டத்தில் பயணம் மேற்கொள்பவா்களுக்கு இருவேளை சைவ உணவு, குளிா்சாதன வசதி பேருந்து மற்றும் சிறப்பு தரிசன டிக்கெட் வழங்கப்படும்.

இதற்கு பெரியவா்களுக்கு ரூ.4 ஆயிரம், சிறியவா்களுக்கு (4 முதல் 10 வயது) ரூ.3,700 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே திருப்பதிக்கு சுற்றுலா செல்ல விரும்பும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த சுற்றுலாத் திட்டத்தில் பயணம் செய்ய 7 நாள்களுக்கு முன்பு முன்பதிவு செய்து கொள்ள
வேண்டும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0422-2302176, 91769 95852 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம். மேலும் சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் இணையதளப் பக்கத்திலும் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.