கோவை மணிகூண்டு பகுதியில் தேசியக்கொடி உற்பத்தி பணி தீவிரம்

75 வது சுதந்திர தினத்தை ஒட்டி வீடுகளில் தேசிய கொடி பறக்க விடுவதால் கோவை மணிகூண்டு பகுதியில் தேசியக்கொடி உற்பத்தி பணி அதிகரித்துள்ளது.

நாட்டின் 75 வது சுதந்திர தினத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு வீட்டிலும், அரசு அலுவலகங்களிலும் வருகிற 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை தேசியக் கொடியை பறக்க விட வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாட்டு மக்கள் அனைவரும் இதை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில், கோவை மணிக்கூண்டு பகுதியில் தேசியக் கொடி தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இங்கு தயாராகும் கொடிகளை வாங்குவதற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான ஆர்டர்கள் வந்த வண்ணம் உள்ளன.

இதனால் வழக்கத்தை விட கொடி உற்பத்தி அதிகரித்துள்ளது. கோவையில் 4 லட்சம் கொடிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கொடி தயாரிப்பாளர்கள் கூறினர்.

இதுகுறித்து கோவை மணிக்கூண்டில் தேசியக்கொடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் ராஜேந்திரன் கூறும் போது: சுதந்திர தினத்தை ஒட்டி தேசிய கொடிகள் தயாரிக்கும் பணியை கடந்த மே மாதம் தொடங்கி விட்டோம். கதர் துணிகளில் தேசியக்கொடி தயாராகிறது. கதர், காகிதம், பிளாஸ்டிக் காகித அட்டை, ஸ்டிக்கர் என பல்வேறு வகைகளில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இங்கு தயாராகும் கொடிக்கு கோவை மட்டுமன்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளாவில் இருந்தும் ஆர்டர்கள் வந்த வண்ணம் உள்ளன. இதற்கிடையே மத்திய அரசு 13 ஆம் தேதியிலிருந்து 15 ஆம் தேதி வரை வீடுகளில் மக்கள் கொடியேற்ற வேண்டும் என கூறியுள்ளது.

இதன் காரணமாக மக்கள் பலரும் தேசியக்கொடிகள் வாங்குவார்கள். இதனால் இந்த ஆண்டு தேசியக் கொடி விற்பனை இன்னும் அதிகரிக்கும். நாங்கள் நிர்ணயிப்பதை விட அதிக அளவில் தேசியக்கொடி விற்பனை நடைபெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பால் தேசியக்கொடி தயாரிப்பு மட்டுமின்றி, பலூன் தயாரிப்பாளர் உள்ளிட்ட பலருக்கும் வேலை கிடைத்துள்ளது என்றார்.