தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கு ரூ. 5 லட்சம் வழங்கிய முன்னாள் மாணவர்கள்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 1978-81 ம் ஆண்டு, வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டப் படிப்பு முடித்த மாணவர்கள், 41 ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு ஒன்று கூடி விழாவாக கொண்டாடினர்.

இந்த விழாவிற்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் பழைய மாணவர்கள் தங்கள் கல்லூரிக்கால ‘டேட்லர்’ என்ற பத்திரிக்கையை தற்காலத்திற்கு தகுந்தவாறு மறு உருவாக்கம் செய்தனர்.

இந்த டேட்லர் ஒவ்வொரு பழைய மாணவரின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருந்தது. இந்த ‘டேட்லர்-2.0’ வை துணைவேந்தர் வெளியிட்டார். முன்னாள் மாணவர்கள் தங்களுக்குள் திரட்டிய ரூபாய் 5 லட்சத்தை பல்கலைகழகத்தில் அறக்கட்டளை நிதியாக நிறுவுவதற்கு துணைவேந்தரிடம் அளித்தனர்.

விழாவில் சிறப்புரையாற்றிய துணேவேந்தர், பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் நடவடிக்கைகள் குறித்தும், அதில் முன்னாள் மாணவர்களின் பங்கு பற்றியும் விளக்கினார். பல்கலைக்கழகத்தின் மற்றும் விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு ஆற்ற வேண்டிய தொண்டுகள் பற்றியும் எடுத்துரைத்தார்.

இந்த விழாவில் 54 முன்னாள் மாணவர்கள் இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்கா மற்றும் நியூசிலாந்து நாட்டிலிருந்தும் வந்து பங்கேற்றனர்.