ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் என்.சி.சி. மாணவர்களுக்கு கலந்துரையாடல் நிகழ்ச்சி

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கோயம்புத்தூர் குரூப் தேசிய மாணவர் படை (என்.சி.சி) மாணவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் வரவேற்றுப் பேசினார்.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான், நிக்கோபார் தீவுகளின் தேசிய மாணவர் படை இயக்குநரக துணை இயக்குநர் ஜெனரல் கமாண்டர் அதுல்குமார் ரஸ்டோகி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது: தேசிய மாணவர் படை மாணவர்கள் திரளாகப் பங்கேற்றுள்ள இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. கோவையில் சிறிது காலம் பணியாற்றிய பசுமையான நாட்கள் நினைவில் வந்து செல்கிறது.

புத்தகங்கள் வாசிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். நல்ல புத்தகங்கள் வாசிப்பது நல்ல அனுபவங்களைப் பெற்றுத்தரும். வாசிப்பை நீங்கள் நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். சமீபத்தில் நான் வாசித்த சாலையில்லா பயணம் என்ற ஆங்கில நூலின், முதல்வரி வாழ்க்கை மிகவும் கடினமானது என தொடங்கியது. ஆம். உண்மைதான். வாழ்வில் அனைத்தும் கடினம் தான். அதை எளிமையாக அமைத்துக் கொள்வது நம் கையில் தான் உள்ளது.

தடைகளைத் தாண்டிதான் வெல்ல வேண்டியுள்ளது. இதற்கு ஆங்கில ஃபார்முலா ஒன்று நினைவுக்கு வருகிறது. அது விழிப்புணர்வுடன் செயல்படுதல், சமநிலையைக் கையாளுதல், எதையும் தைரியமாக எதிர்கொள்ளுதல், ஒழுக்கத்தைக் கடைபிடித்தல் மிகவும் அவசியம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக சிந்திப்பது அவசியம். எதையும் சிந்தித்து செயல்படுத்தினால், கடினமான வாழ்க்கையை எளிமையானதாக மாற்ற முடியும் எனப் பேசினார்.

அதைத்தொடர்ந்து கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவர்களின் கேள்விகளுக்கு கமாண்டர் அதுல்குமார் ரஸ்டோகி பதிலளித்தார்.

அகில இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 6 தமிழ்நாடு மெடிக்கல் கம்பெனி தேசிய மாணவர் படை மாணவர் நதீஷ் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். பின்னர் தேசிய மாணவர் படை அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் கோவை குரூப் கமாண்டர் கர்னல் எல்.சி.எஸ். நாயுடு, கோயம்புத்தூர் குரூப் தேசிய மாணவர் படை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.