கோவை தெற்கு தொகுதியில் தேசிய கொடி மையம் துவக்கம் – வானதி சீனிவாசன் அறிவிப்பு

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற அலுவலகத்தில் தேசிய கொடி விநியோகத்திற்கான பிரத்யேக மையம் அமைக்கப்பட்டுள்ளதாக பாஜக தேசிய மகளிரணி தலைவரும், தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை சித்தாபுதூரில் அமைந்துள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்: 75 வது சுதந்திர தினத்தை ஒட்டி கடந்த ஓராண்டாக நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் பல நிகழ்ச்சிகளை நடத்தி வரும் நிலையில், வருகிற 15 ஆம் தேதி நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியேற்றி 75 வது சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு ஏற்றார் போல் தேசிய கொடி ஏற்றுவது தொடர்பாக விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை கதர் துணியை கொண்டு மட்டுமே தேசியக்கொடி தயாரிக்க வேண்டும், மாலை 6:00 மணிக்கு மேல் தேசியக்கொடி பறக்க விடக்கூடாது என்பது போன்ற விதிகள் சற்றே மாற்றப்பட்டு, எம்மாதிரி துணியிலும் தேசிய கொடிக்கான அளவு மாறாமல் தயாரிக்க வேண்டும், அதற்குரிய மரியாதையுடன் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும், மாலை 6:00 மணிக்கு மேலும் தேசிய கொடியை பறக்க விடலாம், ஆனால் தேசியக் கொடிக்கு மேலாக எந்த கொடியும் பறக்க விடக்கூடாது என்பது போன்ற வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 20 கோடி தேசிய கொடிகள் தயாராகி வருவதாகவும், ஜெம் போர்டல் என்ற நிறுவனத்திற்கு மட்டும் 2 கோடி கொடிகள் உற்பத்தி செய்ய ஆர்டர் கிடைத்துள்ளதாகவும் கூறினார்.

கோவை மாவட்டத்திலும் 75 வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட பாஜக ஏற்பாடு செய்து வருகிறது. கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தேசியக்கொடி விநியோகத்திற்கான சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் ஒரு கோடி கொடி ஏற்றுவதற்கு பாரதிய ஜனதா கட்சி ஏற்பாடு செய்துள்ளது. வருகிற 9 ஆம் தேதி முதல் பாஜகவின் இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி சார்பில் பல நிகழ்ச்சிகள் நடத்த இருப்பதாக குறிப்பிட்டார்.

கோவையில் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி செஸ் விளையாடுவது போன்ற போஸ்டர் ஒட்டப்பட்டு அதில் தமிழகத்தில் தலைவரின் ஆட்டம் துவங்கிவிட்டது என்ற வாசகம் இடம் பெற்றிருப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, இதில் எவ்வித தவறுல் இல்லை. மாநில அரசுகள் ஜனநாயகத்திற்கு புறம்பாக செயல்பட்டால் நாட்டில் எந்த மாநிலத்திற்கும் மகாராஷ்டிராவின் நிலை வரலாம் என்று பதில் அளித்தார்.

கோவையில் மழை பெய்யும் நேரத்தில் பல இடங்களில் தண்ணீர் தேங்குவது குறித்து மாநகராட்சி நிர்வாகம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் கோவை மாநகராட்சியில் 200 கோடி செலவிடப்பட்டுள்ளது என கூறுவது நகைச்சுவையாக உள்ளது என்று விமர்சித்தார்.

கோவை மாநகராட்சியில் கவுன்சிலர்கள், மேயர் என அனைவரும் பதவிக்கு வந்த பிறகும் எவ்வித மேம்பாடும் ஏற்படவில்லை. திமுகவிற்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் இன்று கண்ணீர் விடும் நிலை தான் இருக்கிறது என்று பேசினார்.