தொட்டிபாளையம் பகுதியில் சிபாகா சார்பில் 3000 மரங்கள் நடவு!

கோயம்புத்தூர் கட்டுநர் மற்றும் ஒப்பந்ததாரர் (சிபாகா) சங்கத்தின் சார்பாக 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தொட்டிபாளையம் பகுதியில் 3000 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய் கிழமை நடைபெற்றது.

சிபாகா கடந்த 10 ஆண்டுகளில் 10,000 க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு வைத்து பராமரித்து வருகிறது. மேலும் சமூகம் சார்ந்து பல நற்பணிகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொட்டிபாளையம் பகுதியில் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் 3000 மரக் கன்றுகளும், 500 பனை விதைகளும் நடப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் கதிர் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு மரங்களை நட்டு வைத்தனர்.

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சிபாகா தலைவர் சுவாமிநாதன் வரவேற்புரை வழங்கினார்.

டி.ஆர்.டி.ஏ திட்ட இயக்குனர் கவிதா வாழ்த்துரை வழங்கி பேசுகையில்: இயற்கையோடு இயந்த வாழ்வை தான் தமிழர்கள் வாழ்ந்தனர். இப்போது அதனை நாம் புதுப்பித்து வருகிறோம். ஏன் எனில் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையே ஆரோக்கியத்தை வழங்கும். நமது மழை மற்றும் மலை வளத்தை மீட்டு கொண்டு வர வேண்டும் என மரம் வளர்ப்பதன் அவசியம் மற்றும் அதன் சிறப்புகளை பற்றிக்கூறினார்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது: இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக தன்னை அழைத்ததற்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

மரம் நடும் நிகழ்வில் மாணவர்களை அதிக அளவில் ஈடுப்படுத்த காரணம், அவர்களுக்கான சமூக பொறுப்பை வளர்க்க வேண்டும் என்பதற்காக தான்.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து மியாவாக்கி முறைப்படி குடியரசு, சுதந்திர தின விழா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் மரங்களை நட்டு வருகிறது.

மேலும் கோவை மாநகராட்சியில் எந்த நிகழ்வு நடைபெற்றாலும் முதல் நிகழ்வாக மரக் கன்றுகளே நடப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஒன்றரை வருடங்களாக பல ஆயிரக்கணக்கான மரங்களை கோவையில் நட்டு இருக்கிறோம்.

2011 ஆம் ஆண்டு முதலே மரம் நடும் நிகழ்வு மாநகராட்சியில் நடந்து கொண்டு இருக்கிறது. தனிப்பட்ட முறையில் நானும் எனது கணவரும் (நா. கார்த்திக், சிங்காநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) பல மரக்கன்றுகளை நட்டு அதனை பராமரித்தும் வருகிறோம்.

இந்த மண்ணையும், மக்களையும் காப்பாற்றுவதற்கு மரம் மிகவும் அவசியம். நிறைய மரங்கள் இப்போது அழிந்து விட்டது. பனை மரங்கள் கிராமங்களில் மட்டுமே தென்படுகிறது. நகரங்களில் காண முடிவதில்லை.

மரங்கள் இல்லாததால் பறவைகளும் பாதிக்கப்படுகின்றன. குருவி போன்ற பறவை இனங்களை காண முடிவதில்லை. மரங்களை வளர்க்கும் போது பறவைகளும் அதிக அளவில் வர வாய்ப்பு உள்ளது. நமது சுற்றுச்சூழல் இதனால் மிக சிறப்பாக மேம்படும். சுத்தமான காற்று சுகாதாரமான வாழ்க்கை முறை கிடைக்கும். அதன் அடிப்படையில் இந்த நிகழ்வை சிபாகா ஏற்பாடு செய்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

மேலும் ஒரு மரத்தை வெட்டினால் 100 மரத்தை நட வேண்டும் என்ற தனது வேண்டுகோளையும் முன்வைத்தார்.

ராயல் கேர் மருத்துவமனையின் நிறுவன தலைவர் டாக்டர் மாதேஸ்வரன், கதிர் கல்வி நிறுவனங்களின் நிறுவன தலைவர் கதிர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

மரம் நடுதலை தொடர்ந்து சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அனைவரின் இல்லங்களிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்ற நோக்கில் கதிர் கல்லூரியை சேர்ந்த மாணவர்களுக்கு மூவர்ண கொடி மற்றும் துணிபை வழங்கப்பட்டது.

ஆலமரம், அரசமரம், புங்கன் மரம், வேம்பு மரம், பூவரசு மரம், சொர்க்க மரம், நாட்டு வாகை மரம், கொடுக்காப்புளி மரம், சர்க்கரை பழ மரம் ஆகியவை நடப்பட்டது.

சிபாகாவின் சமூக சேவை குழுவின் தலைவர் செல்வராஜ் மற்றும் உறுப்பினர் தண்டபாணி ஆகியோர் இத்திட்டத்தை ஒருங்கிணைத்தனர். சிபாகா செயலாளர் ராமநாதன், சிபாகா உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தொடரும் சமூக சேவை!

– சுவாமிநாதன், தலைவர், சிபாகா

கோயம்புத்தூர் கட்டுநர் மற்றும் ஒப்பந்ததாரர் சங்கம் 2011 இல் ஆரம்பிக்கப்பட்டு 10 ஆண்டுகளை கடந்து, 11 ஆம் ஆண்டில் உள்ளது. நாங்கள் துறை சார்ந்த திட்டங்களோடு, சமூகம் சார்ந்த செயல்பாடுகளையும் செய்து வருகிறோம். இந்தியாவின் 75 வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் எங்களது சங்கமும் பங்கு பெறுவதன் நோக்கமாக ஒரு மெகா மரங்களை நடும் விழாவை ஏற்பாடு செய்வதற்கு திட்டமிட்டோம். தொட்டிபாளையத்தில் 3000 மரக்கன்றுகளை நட திட்டமிட்டு அதை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளோம்.

இங்கு ஒவ்வொரு விதமான மர வகைகள் நடப்பட்டுள்ளன. மேலும், 500 பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளன. வரும் 5 ஆண்டுகளில் இதன் வளர்ச்சி தெரியும். எங்கள் சங்கத்தின் சார்பாக இந்த மரங்கள் ஓராண்டிற்கு பராமரிக்கப்படும். பின்னர் தொட்டிபாளையம் கிராம மக்கள் இதனை பராமரிப்பார்கள். மேலும், மரக்கன்றுகள் அனைத்திற்கும் சொட்டுநீர் பாசனம் மூலமாக தண்ணீர் பாய்ச்ச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எங்களுடைய சமூகம் சார்ந்த திட்டங்கள் இதோடு நின்றுவிடாது, தொடர்ந்து இந்த ஆண்டிற்க்கான பயணம் இருக்கிறது. இதற்கு அடுத்தத படியாக நீலாம்பூர் பகுதியில் ஒரு வனம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.