இளைஞர்களிடம் அதிகரிக்கும் புத்தக வாசிப்பு!

இன்றைய தலைமுறையினரிடம் புத்தக வாசிப்பு பழக்கம் அரிதாகி விட்டதோ என நாம் எண்ணும் வேளையில், நமது கூற்று தவறு என நினைக்க வைத்து விட்டது கோவை புத்தகத் திருவிழா. பொழுதுபோக்கு முதலான நிகழ்ச்சிகள் கொடிசியாவில் நடந்தால் தான் கூட்டம் கூடும் என்றில்லாமல், தற்போது நடந்து முடிந்த இந்த புத்தக கண்காட்சியிலும் கூட்டம் களைகட்டத் தொடங்கியதில் புத்தக வாசிப்பு உயிர் பெற்றிருப்பதை உணர முடிகிறது.

கோவையில் 6 வது முறையாக புத்தகத் திருவிழா ஜூலை 22 முதல் 31 ஆம் தேதி வரை நடந்து முடிந்திருக்கிறது. 2014 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த புத்தக கண்காட்சி கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றின் காரணமாக நடைபெறவில்லை.

ஒரு பரபரப்பான மதிய வேளையில் கோவை புத்தகத் திருவிழாவின் தலைவர் விஜய் ஆனந்தை சந்தித்து பேசிய போது அவர் பகிர்ந்து கொண்டதாவது: கோவையில் 6 வது பதிப்பாக நடந்து முடிந்த புத்தகத் திருவிழாவுக்கு மிகப் பிரம்மாண்டமான ஆதரவு மக்களிடம் இருந்து கிடைத்துள்ளது. நாங்கள் எதிர்பார்த்ததை விட, அதிகமான பார்வையாளர்கள் வந்திருந்தனர். கடந்த 2019 ஆம் ஆண்டில் 1 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் வந்திருந்தனர். இந்த வருடம் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் வந்திருப்பார்கள் என எண்ணுகிறேன்.

தோராயமாக சுமார் 2 அல்லது 3 கோடிக்கும் மேல் புத்தகங்கள் விற்பனை ஆகி இருக்கும் என கணிக்கிறோம். புத்தக அரங்குகளின் உரிமையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் புத்தகங்கள் நன்றாக விற்பனை ஆனதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், கோவையில் நடந்த புத்தகத் திருவிழா சென்னைக்கு அடுத்த படியாக 60% விற்பனையை எடுத்து விட்டதாக பதிப்பாளர்கள் தரப்பில் கருத்து தெரிவிக்கின்றனர். கொரோனா காலகட்டத்துக்கு பின் இந்த புத்தகத் திருவிழா வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

ஒவ்வொரு அரங்குகளிலும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருந்ததாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில், இளைஞர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கம் அதிகரித்துள்ளது என நம்புகிறோம். பொன்னியின் செல்வன் படமாக வெளிவர உள்ளதால் அதன் மீது உள்ள ஆர்வத்தில் நாவலை ஆங்கிலத்தில் வாங்குகின்றனர். கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது இந்தாண்டு, இளைஞர்கள் வருகை அதிகளவில் இருந்தது.

வேறு எந்த புத்தகத் திருவிழாவிலும், இல்லாத ஒரு சிறப்பம்சமாக கோவை புத்தகத் திருவிழாவில், தொழிலாளர்களுக்கென்று ஒருநாள் முழுவதும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தினோம். இதில் தொழிலாளர்கள் மட்டுமில்லாமல், அவர்களது குடும்பத்தினரும் பங்கேற்கும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தினோம். மேலும் அவர்களிடம் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என அவர்களுக்கு கூப்பன் வழங்கப்பட்டது. அதில் அவர்கள் புத்தகங்களை வாங்கி கொண்டனர்.

வரும் 2023 ஆம் ஆண்டு ஜூலை 21 முதல் 30 ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது. அதில் குழந்தைகளுக்கென்று பிரத்தியேகமாக ஒரு பகுதி அமைக்கலாம் என யோசனை மேற்கொண்டுள்ளோம்.
என தெரிவித்தார்.

கோவை புத்தகத் திருவிழா குறித்து எழுத்தாளர் சி.ஆர்.இளங்கோவனிடம் பேசுகையில்: இந்தப் புத்தகத் திருவிழாவில் புனைகதை அல்லாத புத்தகங்கள் அதாவது, கற்பனை கதை அல்லாத நிஜ சம்பவங்களை அடிப்படையாக கொண்ட நூல்கள் அதிகம் விற்பனை ஆகியுள்ளன. மேலும், குழந்தைகள் ஆங்கில புத்தகங்களை தேடி சென்று வாங்குவதை காண முடிந்தது. ஆனால் தமிழ் புத்தகங்களை வாங்காதது ஏன் என தெரியவில்லை என்ற தன் வருத்தத்தையும் பகிர்ந்து கொண்டார்.

மேலும், கல்லூரி மாணவர்களை காட்டிலும், மாணவிகள் அதிகளவில் வந்திருந்தனர். பொன்னியின் செல்வன் போன்று பிரபலமான நாவல்களையும், பிரபல எழுத்தாளர்களான ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் எழுதிய நாவல்களும் அதிகளவில் வாங்கப்பட்டது.

கொரோனா கால கட்டத்தில் மாணவர்களிடம் படிக்கும் பழக்கம் குறைந்து இருந்தது. இப்படிபட்ட சூழலில் புத்தகத் திருவிழாவுக்கு அதிகப்படியான கூட்டம் வந்திருப்பதை ஒரு சிறப்பு அம்சமாக நான் பார்க்கிறேன். மாலை நேரம் மட்டுமில்லாமல், நாள் முழுவதும் மக்கள் கூட்டம் இருந்தது. பள்ளிகளில் இருந்தும் குழந்தைகள் அதிகம் வந்திருந்தனர். வழக்கமான புத்தகங்களே நிறைய காணப்பட்டதாகவும் தனது கருத்தினை பதிவிட்டார்.

இதில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக 10 நாட்களும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
அதில் கோவை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் ஆணையர், தொழிலதிபர் ஏ.வி.வரதராஜன், கவிஞர்கள் ஆகியோர் எழுதிய நூல்களும், மொழிபெயர்ப்பு நூல்களும் வெளியிடப்பட்டதாக தெரிவித்தார்.

 

Article by: Ramya.S