கொரோனாவால் பெற்றோர் உயிரிழப்பு: தனியார் பள்ளி மாணவர்கள் கட்டணம் செலுத்த விலக்கு

கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு பெற்றோரை இழந்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து தமிழக பள்ளிக்கல்வித் துறை விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொரோனா நோய்த் தொற்றால் தங்களது பெற்றோர்களை இழந்துள்ளனர். அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் கடந்த ஆண்டு மே 29 ஆம் தேதி அறிவித்தார்.

இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கல்வி பயின்று கொண்டு இருப்பின் அவர்களுக்கு கல்விக் கட்டணம் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். மேலும் இந்த மாணவர்கள் தொடர்ந்து, அதே பள்ளிகளில் படிப்பதை உறுதி செய்ய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.