நேரு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

நேரு மேலாண்மை கல்லூரியில் 24 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரியும், செயலாளருமான கிருஷ்ண குமார் தலைமை வகித்து வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி கலந்துகொண்டு பல்கலைக்கழக அளவில் இறுதி தேர்வில் வெற்றி பெற்று முதல் இடம் பிடித்த மாணவ, மாணவர்களுக்கு பட்டம் மற்றும் பதக்கங்களை வழங்கினார். மேலும் 274 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: நேரு கல்வி குழுமங்கள் கடந்த 53 ஆண்டுகளாக கல்வி பணியாற்றி வருவது மகிழ்ச்சிக்குரியது. 3000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருவது பெருமைக்குரியது. ஒவ்வொரு ஆண்டிலும் நேரு கல்வி நிறுவனங்கள் வளர்ச்சி பெற்று வருகிறது. கோவிட் தொற்று காலத்திலும் பல்வேறு உதவிகளை மேற்கொண்டுள்ளது. இங்கு படித்த 25 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளில் பணியாற்றி வருவதும், 10 சதவீதம் பேர் பல்கலைக் கழகத்தில் உயர் படிப்புகளிலும் இருப்பது குறித்து அறிகிறேன். வேலை வாய்ப்பிலும் பெரும் நிறுவனங்களிலும் இந்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம், இந்தியாவின் உணவு பாதுகாப்புக்காக பாடுபட்டு வருகிறது. விவசாயிகளின் மேம்பாட்டிற்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளது. இந்த வேளாண்மைப் பல்கலைக் கழகம் துவங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது. இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஏஆர்), தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு சிறப்பான விருதை அளித்துள்ளது.

கணிணி படித்தோர், வேளாண்மையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். தண்ணீரை 80 சதவீதம் வரை சேமிக்கவும், தேவையை அறிந்து நீர்ப்பாசனம் செய்ய ஐஓடி தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். ரோபோட்டிக் போன்றவை, பழங்களையும், தானியங்களையும் பிரிக்க பயன்படுத்தலாம். நேர்த்தியான விவசாயம் செய்ய கணிணியின் பயன்பாடுகள் அதிகம்.

வரும் 2050 ஆம் ஆண்டில் உலகத்தின் தட்ப வெப்பநிலை 2 டிகிரி உயர வாய்ப்பு உள்ளது. இதை மாற்றி அமைக்க தற்போதைய தகவல் தொழில்நுட்பம் அவசியம். வெப்பநிலையை குறைக்க தூண்டும் காலநிலையை உருவாக்க இது அவசியமாகிறது.

வீணாகும் தண்ணீரை சேகரித்து அவற்றை முறைப்படி சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்தும் வகையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். காலநிலை மாற்றங்களை கட்டுப்படுத்தவும், ஏற்றுமதியை பெருக்கவும், பயிர் உற்பத்திக்கான காலநிலையை உருவாக்கவும் வேண்டும் எனப் பேசினார்.