தேசத்தின் இரண்டாவது பெரிய துறை சிவில் இன்ஜினியரிங்!

– சிபாகா சார்பில் மாணவர்களிடம் விழிப்புணர்வு

கோயம்புத்துார் கட்டுனர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின்(சிபாகா) சார்பாக சுண்டக்காமுத்தூரில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், “சிவில் இன்ஜினியரிங் துறையில் மாணவர்களின் எதிர்காலம்” என்ற  தலைப்பில் அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் சிறப்பு அமர்வு நடைபெற்றது.

தன்னம்பிக்கை பேச்சாளர் ராமகிருஷ்ணன் இதில் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

இது குறித்து சிபாகாவின் தலைவர் சுவாமிநாதன் கூறுகையில்: சிபாகா சார்பாக கட்டுமான துறை சார்ந்தும், சமூகம் சார்ந்தும் நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இந்த ஆண்டின் அகாடமிக் பேனலின் முதல் நிகழ்வாக சுண்டக்காமுத்தூரில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களிடம் சிவில் இன்ஜினியரிங் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என முடிவு செய்தோம்.

அதன் அடிப்படையில் 12-ம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு வரக்கூடிய காலங்களில், அவர்கள் என்ன கல்வி பயிலலாம் என்பதற்காக ஒரு சிறப்பு அமர்வினை ஏற்பாடு செய்துள்ளோம்.

இதில் சுமார் 240 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டதாகவும், இந்த அமர்வு மாணவர்களுக்கு அடுத்து என்ன படிக்கலாம் என்ற ஒரு தெளிவினை கொடுத்திருக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

அகாடமிக் பேனல் ஹெட் கிருஷ்ணகுமார் பேசுகையில்: இன்றைய சூழ்நிலையில் சிவில் இன்ஜினியரிங் துறையை தேர்ந்தெடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. அனைவரும் மென்பொருள் சார்ந்த துறையையே நாடி செல்கின்றனர்.

சிவில் இன்ஜினியரிங் துறையானது நமது தேசத்தின் இரண்டாவது மிகப்பெரிய துறை என்றும், இதில் வேலை வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது எனவும் கூறினார்.

மேலும், இனி வரக்கூடிய ஆண்டுகளில் இத்துறை சார்ந்த வேலைகளில் பணியாளர்களின் தேவை அதிகமாக இருப்பதால் இத்துறையை மாணவர்கள் தேர்ந்தெடுப்பதை ஊக்குவிக்கும் விதமாக நாங்கள் இந்த சிறப்பு அமர்வை அவர்களுக்கு வழிகாட்ட நடத்தினோம். மாணவர்களும் இதில் ஆர்வத்துடன் பங்கேற்றனர் என தெரிவித்தார்.

நிகழ்வில் அகாடமிக் பேனலைச் சேர்ந்த பாஸ்கரன், சிபாகாவின் செயலாளர் ராமநாதன், பள்ளித் தலைமையாசிரியர் ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.