வருமானம் தரும் வேலை போதும், இலவசம் தேவையில்லை!

– ஏ.வி.வரதராஜன், தலைவர், ஏ.வி.வி குழுமம்

ஒருவருக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வருமானம் தரக்கூடிய ஒரு வேலை கிடைத்து விட்டாலே போதும், இலவசம் என்று எதையும் தரத் தேவையில்லை என ஏ.வி.வி குழுமத்தின் தலைவர் ஏ.வி.வரதராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை கொடிசியா வளாகத்தில் ஏ.வி.வரதராஜன் எழுதிய புத்தக வெளியீட்டு (Millions of Jobs Possible or Not) விழா நடைபெற்றது. கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் மற்றும் இந்திய தொழில் வர்த்தக சபை கோவை இணைந்து இந்த நிகழ்வை நடத்தியது.

இதில் சிறப்பு விருந்தினராக சென்னை கேவின் கேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவர் ரங்கநாதன் கலந்து கொண்டு, கோவை மக்களின் கலாச்சாரம் வித்தியாசமானது, அங்குள்ள மக்கள் புதிய சிந்தனைகளை கொண்டவர்கள் என தெரிவித்தார். மேலும், தொழில்துறையை கிராமபுறங்களில் தொடங்கி, அங்கு ஒரு புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கூறினார்.

கோவை பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் இந்நிகழ்விற்கு தலைமை தாங்கி பேசுகையில், இது ஒரு சுவாரசியமான புத்தகம் என்றும், சமூகத்தின் மீது ஏ.வி.வி.க்கு உள்ள அக்கறை குறித்தும் கூறினார். சாதனையாளர்களின் வரலாற்றால் உருவானது தான் கோவை, எதனையும் வித்தியாசமாக நினைப்பதும், செய்வதும் கோவை மக்கள் தான் என்று குறிப்பிட்டு பேசினார்.

காசும் இல்லை, வேலையும் இல்லை!

ஏ.வி.வரதராஜன் தான் எழுதிய (Millions of Jobs Possible or Not) புத்தகம் குறித்த அனுபவம் பற்றி பகிர்ந்து கொண்டதாவது:

இந்தியா அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. கல்வி மூலம் இன்று உலகத்தின் பெரும் நிறுவனங்களான மைக்ரோசாப்ட், கூகுள் ஆகியவைக்கு உதவக் கூடிய அளவிற்கு நம் நாட்டு மக்கள் உயர்ந்திருக்கின்றனர்.

இதெல்லாம் இப்படி இருந்தும் மக்களிடையே ஏற்றத்தாழ்வு என்பது மிகப்பெரியதாக இருக்கிறது. இன்றும் மக்கள் சேரியிலும், சாக்கடை ஓரத்திலும் தெருவோரங்களிலும் உறங்கும் அவலம் தொடர்கிறது.

குறைந்தது 15% மக்கள் தொகை நம்மில் பலரும் கேள்விப்படாத துயரமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். வறுமையை அறியாத மக்களுக்கு இந்த ஏழை மக்கள் படும் துயரத்தைப் பற்றி தெரிய வாய்ப்பு மிகவும் குறைவு தான்.

ஆனால், ஒருவேளை அதை அறிய வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் படும் துயரம் மனதை தொட்டால், கண்டிப்பாக அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முயற்சிகளை எடுக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு உணர்வு தான் இந்த புத்தகத்தை என்னை எழுத தூண்டியது. அந்த மக்கள் துயர் அடைய என்ன காரணம் என்பதை அறிந்து கொள்ள முயற்சி செய்தேன்.

பட்டினியால் எத்தனையோ பேர் துயரம் அடைகிறார்கள்; நம் நாட்டில் போதிய உணவு இல்லையோ என்று நினைத்தால் அப்படி இல்லை! எல்லோருக்கும் உணவு இருக்கிறது, ஏன் நாம் அதை ஏற்றுமதி கூட செய்கிறோம்.

வறுமையில் இருக்கும் மக்களிடம் உணவு வாங்க போதிய அளவு காசு இல்லை. சரி ஏன் காசு இல்லை என்று பார்த்தால் அவர்களுக்கு வேலை இல்லை என்பதே காரணமாக தெரிந்தது. இதை பற்றி பேசவேண்டும் என்று நினைத்தேன்.

இந்த நாட்டில் அனைவருக்கும் அடிப்படை தேவைகளை சந்தித்துக் கொள்ளக்கூடிய அளவிற்கு வருமானம் தரக்கூடிய ஒரு வேலை கிடைத்து விட்டாலே போதும், அவர்கள் யாருக்கும் இலவசம் என்று எதையும் தரத் தேவையில்லை.

தானியங்கி போன்ற தொழில்நுட்பங்கள் தொழிற்சாலைகளுக்கு வலு சேர்க்கும். ஆனால், தொழிலாளர்களுக்கு அதனால் என்ன நலன் கிடைக்கும்? நம் நாட்டிற்கு உகந்த தொழில் நுட்பங்கள் அவசியம். நம் நாட்டிற்கு ஏற்ற அணுகுமுறை அவசியம்.

100 கோடிக்கும் அதிகமான மக்கள் நம் நாட்டில் இருக்கின்றனர். 200 கோடி கைகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். கம்யூனிசமும் அல்லாது கேப்பிட்டலிசமும் இல்லாத நடுநிலைமை கொண்டு தொழில்துறையையும், பொருளாதாரத்தையும், மக்களையும் வளரச் செய்யும் ஒரு கொள்கை வேண்டும் எனக் கூறினார்.