கொடிசியா புத்தகதிருவிழா: திருக்குறள் வாசிப்பு நிகழ்ச்சியில் 5000 மாணவர்கள் பங்கேற்பு!

கோவை கொடிசியா வளாகத்தில் 6 வது புத்தக கண்காடசி நடைபெற்று வருகின்றது. மாவட்ட நிர்வாகம், கொடிசியா, தென்னிந்திய பதிப்பாளர்கள் இணைந்து இந்த புத்தக திருவிழாவை நடத்துகின்றனர். ஜூலை 31ம் தேதி வரை நடைபெறும் இந்த திருவிழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. “திருக்குறள் திரள் வாசிப்பு” நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக இன்று 5000 பள்ளி மாணவ, மாணவியர்கள் இணைந்து திருக்குறள் ஒப்புவித்தனர்.

கோவை மாநகரில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் 5000 பேர் கொடிசியா D ஹாலில், திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்தில் இருந்தும் 2 குறள்கள் என 10 அதிகாரங்களில் இருந்து 20 குறள்களை அனைத்து மாணவ மாணவிகளும் திரளாக வாசித்தனர். ஆசிரியர்கள் சொல்ல சொல்ல திருக்குறள் வாசிக்கப்பட்டது. பின்னர் ஆசிரியர்கள் அக்குறளுக்கான விளக்கம் அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன், தமிழறிஞர்கள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பூபதி கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக பேராசிரியர் ராஜாராம் கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். மேலும் மாவட்ட ஆட்சியர் சமீரன் ஒழுக்கம், கல்வி, செல்வம் ஆகிய அதிகாரங்களில் இருந்து 4 திருக்குறள்களை வாசித்தார்.

செய்தியாளர்களை சந்தித்து மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: இந்த திருக்குறள் திரள் வாசிப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது, இதில் 5000க்கும் மேற்பட்ட மாணவர்கள் வருகை புரிந்துள்ளனர். மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பேச்சுபோட்டிகள் நடைபெற்றது. திருக்குறள் பதிப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தில் திருவள்ளுவரின் ஓவியம் காவி நிறத்தில் அச்சிடப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, இவர் அது தவறான கருத்து, நார்மலாக தான் அச்சடிக்கப்பட்டது அது பார்வையின் குழப்பம் என்றார். நான் திருக்குறள் புத்தகத்தின் அட்டையை பார்க்கவில்லை அதனுள் என்ன எழுதி உள்ளது என்று தான் பார்த்தேன். அது எல்லா நிறங்களும் உள்ள ஒரு பொக்கிசம் என பதிலளித்தார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.

 

Article by: பா .கோமதி தேவி