வாக்க ரூ நிறுவனம் சார்பில் அரசுப் பள்ளி நூலகம் சீரமைப்பு

கோவை செட்டிப்பாளையத்தில் அமைந்துள்ள அரசு மேனிலைப்பள்ளியில் இயங்கி வரும் நூலக அமைவிடத்தின் ஒட்டுமொத்த உட்கட்டமைப்பையும் வாக்கரூ நிறுவனம் சீரமைத்து, 100 க்கும் அதிகமான புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

நூலக திறப்பு விழாவில், பத்மஶ்ரீ விருது பெற்ற பிரபல தமிழ் எழுத்தாளர் மற்றும் கவிஞரான சிற்பி பாலசுப்ரமணியம், தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

செட்டிப்பாளையம் நகராட்சி கவுன்சிலர் ரங்கசாமி, பெற்றோர் – ஆசிரியர் சங்கத் தலைவர் முத்துக்குமார், அச்சங்கத்தின் உறுப்பினர்கள், வாக்கரூ நிறுவனத்தின் பிரதிநிதிகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து வாக்கரூ இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குனர் நௌஷத் கூறுகையில்: நூலகத்தில் வசதியான அறை கலன்களை நிறுவியிருப்பதன் மூலம் மாணவர்களுக்கு ஒரு நல்ல வாசிப்பு சூழலை உருவாக்குவதற்காக அனைத்து முயற்சிகளையும் எடுத்திருக்கிறோம். நூலக அறையில் பொன் மொழிகளும் மற்றும் அழகான கலைப் படைப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன.

நூலக சுவர்களை அலங்கரித்திருப்பதன் மூலம் புத்தகங்களை வாசிப்பதற்கு உற்சாகமூட்டும் ஒரு சூழலை உருவாக்கித் தருவதில் வாக்கரூ நிறுவனத்தைச் சேர்ந்த படைப்பாக்கத் திறன் மிக்க தன்னார்வலர்கள் பணியாற்றியிருக்கின்றனர் என்று கூறினார்.

நூலக தொடக்க விழா நிகழ்வில் சிற்பி பாலசுப்ரமணியம் பேசுகையில்: பல்வேறு நூலகங்களில் கிடைக்கின்ற சிறப்பான புத்தகங்களையும் மற்றும் பிற ஆதார வளங்களையும் பயன்படுத்தியதன் மூலம் விரிவான அறிவை சேகரித்துக் கொண்ட தனது சொந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

நூலகங்களில் தான் வாசித்த புத்தகங்களிலிருந்து மரங்களின் முக்கியத்துவம் மற்றும் அவைகளினால் கிடைக்கும் இதுவரை அறியப்படாத பயன்களை தான் புரிந்து கொண்டவிதம் குறித்து ஒரு நேர்த்தியான எடுத்துக்காட்டையும் சுட்டிக்காட்டினார்.

வகுப்பறைகளுக்கு அப்பாலும் தங்களது வாசிப்பை மாணவர்கள் கொண்டு செல்ல வேண்டுமென்று மாணவர்களிடம் வலியுறுத்தினார். அறிவை இன்னும் மிகப்பெரிதாக விரிவுபடுத்துவதற்கு புத்தகங்களை வாசிப்பது இன்றியமையாதது என்று குறிப்பிட்டார்.

நூலகத் தொடக்க விழாவிற்கு முன், வாசிப்பை நேசிப்போம் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிற்பி பாலசுப்ரமணியம் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.