மாணவர்களே காலை உணவை தவிர்க்காதீர்கள்! – முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

மாணவர்கள் காலை உணவை தவிர்க்கக் கூடாது என்றும், காலை வேளையில் தவறாமல் சாப்பிட வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.

சென்னை அசோக் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு மனநலம் பற்றிய விழிப்புணர்வு வாகனத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் 805 வாகனங்கள் மூலம் மருத்துவக் குழுவினர் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கவுள்ளனர்.

இதனை துவக்கி வைத்து அவர் பேசியதாவது: கடந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் தனக்கு உடல் சோர்வாகத்தான் இருக்கிறது என்றும், ஆனால், மாணவர்களாகிய உங்களை பார்க்கும்போது அவையெல்லாம் பறந்து போய்விடுகிறது எனவும் உற்சாகமாக பேசினார்.

இந்த மேடைக்கு வருவதற்குமுன் ஒரு வகுப்பறைக்கு சென்று அங்குள்ள மாணவர்களிடம் பேசினேன். மாணவிகளிடம் காலை உணவு சாப்பிட்டீர்களா? என்று கேட்டதற்கு சிலர் காலையில் சாப்பிடமால் வந்ததாக தெரிவித்தனர்.

இதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலை என்றும், தான் படிக்கும் காலத்தில் கூட பேருந்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக பலமுறை சாப்பிடாமல் சென்றிப்பதாகவும் தெரிவித்தார்.

பெரும்பாலான மாணவர்கள் காலையில் சாப்பிடாமல் பள்ளிக்கு வருகிறார்கள். மாணவர்கள் எக்காரணத்தை கொண்டும் காலை உணவை தவிர்க்கக் கூடாது. காலையில்தான் அதிகமாக சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். பகலில் குறைவாகவும், இரவில் அதைவிட இன்னும் குறைவாகவும் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால், அதற்கு மாறாக காலையில் குறைவாகவும், இரவில் அதிகமாகவும் சாப்பிடுகிறோம். அதுபோல இருக்கக்கூடாது. என்றார்.

தியாகராயர், காமராஜர், கலைஞர், எம்.ஜி.ஆர் ஆகியோரால் வளர்த்தெடுக்கப்பட்ட மதிய உணவு திட்டமானது திமுக அரசால் அடுத்த வளர்ச்சியை அடைய போகிறது. காலையில் சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்க இருக்கிறது. அதற்கான அரசாணையில் நேற்றுதான் கையெழுத்திட்டேன் என்று கூறினார்.

மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வந்துவிட்டால் படிப்பு தானாக வந்துவிடும். நல்ல செயல்களும், உடற்பயிற்சியும் ஆரோக்கியமான மனநிலையை தரும் என்றார்.