எதிர்பார்ப்பை விலக்கி, ஆனந்தமாக வாழ முயலுங்கள்!

 – டாக்டர். இ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, நரம்பியல் மனோதத்துவ நிபுணர், மற்றும் நிறுவனர், புத்தி கிளினிக்

பொதுவாக மனிதருக்கு பிறரிடம் எதிர்பார்ப்புகள் இருப்பது இயல்பான ஒன்று தான். ஆனால் நமது எதிர்பார்ப்புகளே மன அழுத்தத்தையும் உருவாக்குகிறது. உங்களால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களை நினைத்து அதில், உங்களது எதிர்பார்ப்பை உள்ளடக்கும் போதும், நினைத்தது கிடைக்காத போது வரும் அதிருப்தியும் ஒருவருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே வாழ்க்கையை எதிர்பார்ப்புகள் இன்றி போகின்ற போக்கில் வாழுங்கள் என புத்தி கிளினிக்கின் நிறுவனரும், நரம்பியல் மனோதத்துவ நிபுணருமான டாக்டர்.இ.எஸ். கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார்.

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் கடந்த ஜூலை மாதம் முதல் ஒருங்கிணைந்த மூளை, நரம்புமண்டலம் மற்றும் மனநல சிகிச்சை மையமான புத்தி கிளினிக் செயல்பட்டு வருகிறது. இதன் கிளைகள் சென்னையிலும் செயல்படுகிறது. தற்போது கோவையில் புத்தி கிளினிக் தனது முதலாம் ஆண்டை நிறைவு செய்துள்ளது. இதனை முன்னிட்டு இந்த மையத்தின் செயல்பாடுகள் குறித்தும், மூளை, மனநலன், நரம்பியல் சார்ந்த பிரச்சினைகளையும் இதன் நிறுவனர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

‘புத்தி’யின் துவக்கம்: 

பலதுறைகள் ஒருங்கிணைந்து மருத்துவ சிகிச்சையை வழங்கும் நோக்கத்தில் புத்தி கிளினிக் துவங்கப்பட்டது. தான் வெளிநாட்டில் பணியாற்றும் போது மனநலன் மற்றும் நரம்பு சார்ந்த பாதிப்பைக் கொண்டவர்களுக்கு ஒருங்கிணைந்த மருத்துவம் வழங்குவதைக் கண்டதாக தெரிவிக்கிறார் டாக்டர்.கிருஷ்ணமூர்த்தி.

அதாவது, மருத்துவர், பிசியோதெரபிஸ்ட், பேச்சு பயிற்சி தரும் நிபுணர், மனநல மருத்துவர், செவிலியர் ஆகியோரை உள்ளடக்கிய குழுவினர் ஒன்றிணைந்து நோயாளிக்கு சிகிச்சை வழங்குவார்கள். இந்தப் பயிற்சி அனுபவம் தனக்கும் இருந்ததால் இது போன்ற ஒரு சேவையை இந்தியாவிலும் வழங்க வேண்டும் என்று எண்ணி மேலை நாடுகளைப் போல் ஒரு பிரத்தியேக சிகிச்சையை பலதுறை மருத்துவர்களுடன் இணைந்து அளித்து வந்தார்.

“ஆனால் எங்களை அணுகும் சில நோயாளிகள் ஆயுர்வேதம், யோகா, ஹோமியோபதி ஆகிய  சிகிச்சைகள் மூலம் உடல் நலனில் நல்ல மேம்பாடு இருப்பதாக என்னிடம் தெரிவித்தனர்.”  “நவீன மருத்துவ முறைகளை கையாளும் எனக்கு ஆரம்பத்தில் இதில் நம்பிக்கை ஏற்படவில்லை. ஆனால் பெரும்பாலும் நாள்பட்ட உடல் நலப்பிரச்சினைகளை கையாளுவதால் நமது பழமையான ஆயுர்வேத முறை, யோகா, இயற்கை மருத்துவம், குத்தூசி மருத்துவம் (acupuncture) ஆகியவற்றிலும் பலன் கிடைக்கும் என்று எண்ணி ஆரம்பிக்கப்பட்டது தான் புத்தி கிளினிக். மேற்கூறியவற்றோடு, அலோபதி, உடற்பயிற்சி, உளவியல், நரம்பியல் ஆகிய சிகிச்சைகளை நவீன மருத்துவத்தை அடிப்படையாக கொண்டு ஒருங்கிணைந்து ஒரே கூரையின் கீழ் வழங்கி வருகிறோம்.”

சிகிச்சை முறை:

நரம்பியல் மற்றும் மனோதத்துவத்தில் மூளையின் செயல்பாடுகளை தூண்டுவது மிக முக்கியமானது. இதற்காக முதலில் Repetitive Transcranial Magnetic Stimulation என்ற சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தினோம். இதனால் மன அழுத்தம், ஓ.சி.டி, பார்கின்சோனிசம், உடலில் தசை நார் இறுக்கம், செயல்பாடு சார்ந்த பிரச்சினை மற்றும் ஏதாவது ஒரு பழக்கத்திற்கு ஆட்படுதல் போன்றவற்றிக்கு தீர்வளிக்கும் ஒரு சிகிச்சை முறை தான் இது.

இதற்கு அடுத்த படியாக ட்ரான்ஸ்க்ரேனியல் டைரக்ட் கரெண்ட் ஸ்டிமுலேஷன் (TDCS) என்ற சிறிய கருவி மூலமாக குறிப்பிட்ட அளவிலான மின்சாரம் மூளைக்கு அனுப்பப்படுகிறது. இது முதியவர்களுக்கு ஏற்படும் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகள், பயம், குழந்தைகளின் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றம் என பல நிலைகளில் இந்த சிகிச்சை மூலம் தீர்வு கிட்டியுள்ளது.

ட்ரான்ஸ் அரிக்குலர் வெகஸ் ஸ்டிமுலேஷன் கருவியினால் (TAVNS) மூளையில் முக்கிய நரம்பாக கருதப்படும் வெகஸ் நரம்பை மின்சாரம் மூலம் தூண்டுவதால், உடல் உள் உறுப்புகளில் சீரான இயக்கம், மலசிக்கல், அதிகப்படியான வியர்வை வெளியேறுதல், தசை இறுக்கத்தை சீராக்க உதவுகிறது. மேலும், வலிப்பு, ஒற்றை தலைவலி, தலை சுற்றல் போன்றவற்றிற்கும் இது ஒரு எளிமையான சிகிச்சை.

எங்களது பல்துறை மருத்துவர்களின் ஒருங்கிணைந்த சிகிச்சையினால் 1000 க்கும் மேற்பட்டவர்கள் நலம் பெற்றுள்ளனர். நவீன மருத்துவம், ஆயுர்வேதம், யோகா உள்ளிட்ட 15 வகையான சிகிச்சை முறைகளை இங்கு வழங்குகிறோம்.

நோயும், தீர்வும்:

நரம்பியல் மற்றும் மனோ தத்துவ சிகிச்சைகள், பிறந்து 2 மாதம் ஆன குழந்தைகளில் இருந்து முதியோர்கள் வரை இங்கு அளிக்கப்படுகிறது. குழந்தைகளில் ஆட்டிசம், வலிப்பு, கவன கோளாறு, மனநல குறைப்பாடு போன்றவையும், முதியவர்களில் ஒற்றை தலைவலி, மறதி, மன அழுத்தம், மன உளைச்சல் போன்றவையும், விபத்தினால் தலையில் ஏற்பட்ட பாதிப்பு, பக்கவாதத்தினால் ஏற்பட்ட பாதிப்பு ஆகியவை நரம்பியல் மற்றும் மனோ தத்துவ சிகிச்சையில் குணப்படுத்தப்படுகின்றன.

ஒருநபருக்கு மேற்கூறிய பிரச்சினைகளோடு, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நோய்கள் இருப்பதை கொமொர்பிடிட்டி என்போம். ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தை முதல் மனசோர்வு உடைய முதியவர்கள் வரை தசை வலி, ஜீரண கோளாறு, மூச்சு விடுவதில் சிரமம், தூக்கமின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதற்கு வழங்கப்படும் சிகிச்சைகளில் மருந்தில்லாமலும் அல்லது குறிப்பிட்ட அளவிலான மருந்தை பயன்படுத்தியும் ஒருங்கிணைந்த சிகிச்சை முறையில் நோயாளியின் செயல்பாடு, தூக்கம், ஜீரணிக்கும் திறன் போன்றவற்றை குணப்படுத்தியுள்ளோம்.

மறதி நோய் என்பது குறிப்பிட்ட வயதினர் என்றில்லாமல் அனைத்து வயதினருக்கும் ஏற்படும். இவர்களுக்கு பிரச்சினை உள்ளதா என்பதை முதலில் ஆராய்ந்து, பின் என்ன காரணத்தினால் ஏற்பட்டுள்ளது, இதற்கு என்ன தீர்வு உள்ளது என்பது ஆராயப்படுகிறது.

மேம்படும் வாழ்க்கை தரம்:   

குழந்தைகளில் ஒரு சிலர் மிகவும் அதிவேகமான தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு, இந்த அதிவேகமான தன்மையை குறைப்பது மிகவும் சவாலான ஒன்று. அவர்களால் ஒரு இடத்தில் அமர முடியாது, நாம் சொல்வதை புரிந்து பதில் சொல்லுவதில் சிரமம், படிப்பில் கவன குறைவு இருக்கும். ஆனால் நாங்கள் அளிக்கும் தனித்துவமான சிகிச்சையில் குழந்தைகளுக்கு நல்ல மாற்றம் ஏற்படுவதை காண முடிகிறது.

முதியவர்களில் காணப்படும் பார்கின்சன்ஸ் நோயினால் அவர்களுக்கு நடப்பதில் சிரமம், மறதி, பிரம்மை போன்ற உணர்வுகள் ஏற்படும். இவர்களுக்கு சிகிச்சையின் மூலம் நினைவு திறன் அதிகரிப்பு, உடல் அசைவில் மேம்பாடு, தினசரி செயல்பாடுகளில் முன்னேற்றம், பிரம்மை உணர்வு நீங்கி தாங்களாகவே தெளியுற்று உள்ளனர். குறிப்பாக மருந்தை அதிகப்படுத்தாமல் நோயாளியின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துகிறோம்.

கொரோனாவும், மன அழுத்தமும்:

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பின்பு ஒரு சிலர் நரம்பியல் தொடர்பான மனநல பிரச்சினைக்கு ஆளாகினர். பக்கவாதம் போன்ற கடுமையான நோயினால் பாதிக்கப்படுவது, இதை தவிர்த்து, மனநல பாதிப்புகள், ஒருவிதமான குழப்ப நிலை, முதியவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

நமது உடலின் உள் உறுப்புகளை மூளை தான் கட்டுக்குள் வைத்திருக்கிறது. ஆனால் நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை உணர்ச்சியின் வாயிலாக உடல் நமக்கு தெரிவித்து விடும். இதைக் கட்டுப்படுத்திட முடியாது. இதனை நமக்கு உணர்த்தும் நரம்புகளை ‘தன்னியக்க நரம்பு’ என்போம். இந்த இயக்கம் கொரோனாவினால் சிலருக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோயாளிகளுக்கு கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளாக சோர்வு, அதிகப்படியான வியர்வை வெளியேறுதல், ரத்த அழுத்தத்தில் ஏற்ற இறக்கம், சர்க்கரை அளவில் மாறுபாடுகள், அடிக்கடி பசி உணர்வு மற்றும் தூக்கம் வருதல் போன்ற அசாதாரணமான நிலை சிலருக்கு ஏற்படுகின்றன. இது நரம்பியலும், மனோதத்துவமும் இணைந்த பிரச்சினை. அதில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் இந்த அறிகுறிகள் இருப்பதைக் காண முடிகிறது.

இந்த உலகம் ஏதாவது ஒரு பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டால் அது நம் உடலையும், மனதையும் பாதிக்க வாய்ப்புள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நரம்பு தொடர்பான பாதிப்பு ஏற்கனவே இருந்தாலும், கொரோனாவினால் ஏற்பட்ட பிந்தைய இடையூறுகளுக்கும் புத்தி கிளினிக் சிறந்த முறையில் தீர்வளித்து வருகிறது.

எதிர்பார்ப்புகளை நிர்வகியுங்கள்:

நமது எதிர்பார்ப்புக்கும், உண்மை சம்பவத்துக்கும் இடைப்பட்டு நிகழ்வது தான் மன அழுத்தம். இதற்கு கவலை, மனச்சோர்வு ஆகியவை மனம் தொடர்பான அறிகுறிகளாக உள்ளன. சோர்வு, படபடப்பு, மூச்சிரைத்தல், அடிக்கடி பாத்ரூம் செல்லுதல், அதிக வியர்வை போன்றவை உடல் தொடர்பான அறிகுறியாக இருக்கின்றன.  மேலும் மன அழுத்தத்தினால் முக்கியமாக பாதிக்கப்படுவது தன்னியக்க நரம்பு மண்டலம் தான். எதில் இருந்து முதலில் மன அழுத்தம் உருவாகிறது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

மனநல மருத்துவர்கள் அறிவாற்றல் நடத்தை சிகிச்சை முறையினை பின்பற்றுகிறார்கள். இதில் ஒருவரின் யோசனைகள், அவரை எவ்வாறு பாதிக்கிறது என்பது கண்டறியப்படுகிறது. மேலும், யோகா, ஆயுர்வேதம், உடற்பயிற்சி போன்ற பல சிகிச்சை முறைகள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவியாக உள்ளன.

நம்மை சுற்றி நடக்கும் சந்தர்ப்ப சூழ்நிலைகளை நம்மால் நிர்வகிக்க முடியாது. ஆனால் நமது எதிர்பார்ப்புகளை நிர்வகிக்க முடியும். அதோடு எதிர்பார்ப்புகளை கையாள தெரிந்திருந்தால் மன அழுத்தத்தை யாராலும் சமாளிக்க முடியும்.

ஒருங்கிணைந்த அணுகுமுறை: 

ஆயுர்வேதத்தில் உள்ள மருந்து எண்ணெய்கள் மூலம் பல சிகிச்சைகள் பின்பற்றப்படுகின்றன. ஆனால் இவை உடலுக்கு உட்புறமாக இல்லாமல், வெளிப்புற சிகிச்சையாக மட்டுமே புத்தி கிளினிக்கில் வழங்கப்படுகின்றன. இயற்கை மருத்துவத்தில் உள்ள மெரிடியன் மசாஜ் தன்னியக்க நரம்பு செயலிழப்பை சீரடைய செய்ய உதவுகிறது. மேலும் பல்வேறு வலிகளில் இருந்தும் நிவாரணம் அடைய இது உதவுகிறது.

ஜீரண கோளாறு, மூட்டுகள் பாதிப்பு போன்றவற்றிக்கு மண் சிகிச்சை (Mud therapy) அளிக்கப்படுகிறது. கால் வீக்கம் முதியவர்களில் பொதுவாக காணப்படும் ஒன்று. இதற்கு ஆயுர்வேதத்தில் லேப்பம் என்ற சிகிச்சை வழங்கப்படும். அடுத்ததாக பிசியோதெரபி, உளவியல், பேச்சு பயிற்சி தரும் சிகிச்சை ஆகியவையும் நரம்பு சார்ந்த பாதிப்பு உடையவருக்கு தரப்படுகிறது.

தனித்துவமான செயல்பாடுகள்:

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை நிர்வாகம் தங்களது அணுகுமுறையை பாராட்டி, அவர்களுடன் இணைந்து செயல்பட அழைத்ததாகவும், இங்குள்ள மருத்துவர்களும் தங்களுக்கு ஆதரவு அளிப்பதாகவும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தெரிவிக்கிறார். சென்னையில் மக்களிடம் கிடைத்த ஆதரவு போன்றே கோவையிலும் கிடைத்து வருகிறது. இங்கு வழங்கப்படும் பிரத்தியேக சிகிச்சையில் முதியோர்களுக்கு நல்ல பலன் கிடைக்கிறது. வீட்டு பராமரிப்பு சேவையையும் தற்போது தொடங்கி இருக்கின்றனர்.

புத்தி கிளினிக்கில் புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். மூளையின் நினைவக செயல்பாடு, உணர்ச்சி செயல்பாடு, உடல் கோளாறு போன்ற அனைத்திற்கும் கணினிமயமாக்கப்பட்ட மதிப்பீடு செய்கிறோம். மேலும், நேரடியாக எங்களை அணுக முடியாதவர்களுக்கு இணைய வழியாக சில தெரபிக்களை வழங்குகிறோம். வலியை போக்கும் வகையில் சில புதிய சிகிச்சை முறைகளையும் எதிர்பார்க்கிறோம். ஒரு குழுவாக இணைந்து ஒருங்கிணைந்த மருத்துவத்தை வழங்குவதோடு, நோயாளிகளே அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, தங்களுக்கு தேவையான சிகிச்சையை மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக்கொள்ளலாம்.

விழிப்புணர்வு அதிகரித்துள்ளது:

நரம்பியல் மற்றும் மனோதத்துவத்தை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா காலத்தில் மனநலனுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் இதுபோன்ற சிகிச்சைகள் இருப்பதை தெரியப்படுத்த வேண்டும். ஒருங்கிணைந்த மருத்துவம் என்பது அனைத்து தரப்பினருக்கும் கிடைக்க வேண்டும். கடந்த ஆண்டு புத்தி கிளினிக் புத்தி சேவா மூலம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.

மருந்து மற்றும் அறுவை சிகிச்சை மூலமாக மட்டுமே நரம்பியல் மற்றும் மனோதத்துவ நோய்களை சரி செய்வதற்க்கான வாய்ப்பு குறைவாக தான் இருக்கும். நீண்டநாள் பாதிப்பு இருப்பவர்களுக்கு மருத்துவத்திற்கு அப்பாற்பட்டு என்ன தீர்வளிக்க முடியும் என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.

நவீன தொழில் நுட்பம், புனர்வாழ்வு சிகிச்சைகள், நமது நாட்டில் உள்ள ஆயுர்வேதா, யோகா ஆகியவற்றில் நோயை குணப்படுத்துவதற்கான நிறைய வாய்ப்புகள் உள்ளன. இதை நாம் என்றும் தவிர்த்திடக் கூடாது. மேலும், சிலர் நோயுடனே வாழ்ந்து விடலாம் என எண்ணி விடுகின்றனர். இதில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என நம்பிக்கையுடன் சிகிச்சை எடுத்துக் கொள்ள முன்வர வேண்டும் என டாக்டர் கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார்.