மின் கட்டண உயர்வு திமுகவுக்கு பின்னடைவா?

பத்து ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த திமுகவிடம் இருந்து பொதுமக்கள் எதிர்பார்த்த விஷயங்கள் ஏராளமானவை. ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனா நிவாரணத் தொகை ரூ.4,000, பால் விலை குறைப்பு, பெண்களுக்கு நகர பேருந்துகளில் இலவச பயணம் உள்ளிட்ட அறிவிப்புகளால் பொதுமக்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். இதனால், விடுபட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் 90 சதவீத வெற்றியை கொடுத்து திமுகவுக்கே மீண்டும் இன்ப அதிர்ச்சியை கொடுத்தனர் பொதுமக்கள். திமுக பலவீனமாக இருப்பதாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில் கூட திமுகவுக்கு வெற்றி மேல் வெற்றியே கிடைத்தது முதல்வர் ஸ்டாலினை திக்குமுக்காட வைத்தது.

பொதுமக்களின் இன்ப அதிர்ச்சியை அவர்களால் சில மாதங்கள் கூட அனுபவிக்க முடியவில்லை. அதற்குள் மக்களுக்கு திமுக அரசு தொடர்ந்து அதிர்ச்சி வைத்தியத்தை கொடுக்கத் தொடங்கியுள்ளது. இப்போது தான் சொத்துவரி உயர்வு என்னும் அதிர்ச்சி வைத்தியத்தை திமுக அரசு கொடுத்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து பொதுமக்களே இன்னும் மீளாத நிலையில் இப்போது மின்கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களுக்கு பேரதிர்ச்சியை திமுக அரசு கொடுத்துள்ளது மிகப்பெரிய எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் மின் கட்டணம் உயர்ந்திருக்கிறது. தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்குத் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் நஷ்டத்தை சுட்டிக் காட்டி, மின் கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை’ என்று கூறியிருக்கிறார் தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. மத்திய அரசு கொடுத்த அழுத்தம்தான், மின்கட்டண உயர்விற்குக் காரணம். எனினும், ஏழை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று சொல்லியிருக்கிறார் அவர்.

பாதிப்பு ஏற்படுத்தாத கட்டண உயர்வு என்று எதுவும் இருக்க முடியாது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 100 யூனிட் வரையிலான இலவச மின்சாரம் இப்போதும் தொடர்கிறது. அதைத் தாண்டிய மின் பயன்பாட்டுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருக்கின்றன. இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் வரை பயன்படுத்துவோர் முன்பு ரூ.170 கட்டணம் செலுத்தினர். அது இனி 225 ரூபாயாக இருக்கும். இப்படி எல்லோருக்குமே 12% முதல் 52% வரை மின் கட்டணம் உயர்ந்துள்ளது.

இந்தக் கட்டண உயர்வுக்குப் பிறகும் தமிழகத்தில் மின் கட்டணம் குறைவுதான் என்று தமிழக அரசு கூறுகிறது. கர்நாடகம், கேரளம், ஆந்திரம், மகாராஷ்டிரம், குஜராத், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் என்று பல மாநிலங்களின் கட்டணங்களுடன் ஒப்பிட்டு இதை அரசு விவரித்துள்ளது. கட்டண உயர்வை நியாயப்படுத்த அரசு பல ஒப்பீடுகளைச் செய்யலாம். ஆனால், சில விஷயங்களைத் தமிழக அரசு கவனிக்க வேண்டும்.

நாட்டிலேயே மின் கட்டணம் குறைவாக இருக்கும் மாநிலங்களை இந்த ஒப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ளவில்லை. இந்தியாவிலேயே வாழ்க்கைச் செலவுகள் அதிகம் இருப்பதாகக் கருதப்படும் மாநகரமான டெல்லியில் மின் கட்டணம் தமிழகத்தை விடக் குறைவு. பஞ்சாப்பில் புதிதாகப் பதவி ஏற்றிருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் அரசு, அம்மாநிலத்தில் வீட்டு உபயோகத்துக்கான மின்சாரத்தில் மாதம் 300 யூனிட் வரை இலவசமாகக் கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

‘மத்திய அரசின் அழுத்தம் காரணமாக கட்டணத்தை உயர்த்தினோம்‘ என்று தமிழக அரசு கூறுகிறது. ஆனால், டெல்லியிலும் பஞ்சாப்பிலும் இதைச் சாத்தியமாக்க முடிந்திருக்கிறதே. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன் அளவீடு செய்யப்படுவதால் அதிகமாக மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதைத் தவிர்க்க மாதா மாதம் மின் கட்டணம் கணக்கிடப்படும் என்று தி.மு.க தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. ஆட்சி அமைந்து ஓராண்டு காலம் தாண்டியும் இன்னமும் அது அமலுக்கு வரவில்லை. அதை அமல் செய்யும் உத்தேசம் இந்த அரசுக்கு இருக்கிறதா என்பதுகூட தெரியவில்லை.

இந்நிலையில் பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் காஸ் சிலிண்டர் விலை உயர்த்தலாமா என்று மத்திய அரசைக் கண்டிக்கும் தி.மு.க., தன் பங்குக்கு மின் கட்டண உயர்வை மக்கள் தலையில் சுமத்துவது சரியல்ல. பொதுமக்களுக்கு தொடர்ந்து அதிர்ச்சி வைத்தியத்தை திமுக அரசு ஏன் கொடுக்கிறது என்றால் தமிழகத்தின் நிதிச்சுமையை குறைத்து, வருவாயை பெருக்க வேண்டும் என்பதற்காக என ஆளும் கட்சி தரப்பினர் சப்பைக்கட்டு கட்டலாம்.

ஆனால், கடந்த அல்லது இப்போதைய ஆட்சியாளர்களின் தவறான நிர்வாகத்தால் ஏற்படும் பொருளாதார சுமையை சாமானியன் தான் சுமக்க வேண்டுமா என்பது தான் பொதுமக்களின் மனதில் எழும் அர்த்தமுள்ள கேள்வி. அரசியல்வாதிகள், ஆட்சியாளர்களை பொறுத்தவரை தேர்தலுக்கு மட்டுமே பயப்படுவார்கள். தமிழகத்தில் இனிமேல் 2024 இல் மக்களவைத் தேர்தல் தான் நடக்கும். அதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் மக்கள் காத்திருக்க வேண்டும். பொங்கல் அல்லது தீபாவளிக்கு பண முடிப்பு மற்றும் பரிசுப்பொருள்களை வழங்கி சமாதானப்படுத்திவிடலாம் என திமுக அரசு கணக்குப்போடலாம். மக்கள் வழக்கம் போல பரிசுகளுக்கு மயங்குகிறார்களா அல்லது தங்கள் கோபத்தை வெளிப்படுத்துகிறார்களா என்பதை அடுத்த தேர்தல் முடிவில் தான் காண முடியும்.

மின்கட்டண உயர்வை திரும்ப பெறுக!

இது தொடர்பாக கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் நா.லோகு கூறும்போது, தமிழகத்தில் அனைத்து வகை மின் பயன்பாட்டிற்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்த அறிக்கையில், மின்வாரியம் பல கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் மத்திய அரசு தொடர்ந்து மின் கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி வருவதாகவும், இதனால் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. அதற்கு பின்னர் உயர்த்தப்படவில்லை என்று தவறான தகவலை பதிவு செய்துள்ளார்.

ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பொதுமக்கள் கருத்துக்களை கேட்டு மின் கட்டணத்தை உயர்த்தியது. தற்பொழுது மின் கட்டணம் உயர்த்தி ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில் அமைச்சர் எட்டு ஆண்டுகள் என தவறாக பதிவு செய்துள்ளார். மேலும் மின்வாரியத்தில் நிலவும் பெரும் ஊழல்களும் முறைகேடுகளுமே மின்வாரியத்தில் நஷ்டம் ஏற்படுவதற்கு காரணமாகும்.

குறிப்பாக லைன் லாஸ் என்று சொல்லப்படும் மின்பாதை விநியோகத்தில் குளறுபடிகள், நிலக்கரி ஊழல், மின்வாரிய அதிகாரிகளுக்கு அளவுக்கதிகமான சம்பளம், மின் கம்பம் கொள்முதலில் தரமற்ற மின்கம்பம், தளவாடப் பொருட்களின் கொள்முதலில் முறைகேடு, ஒவ்வொரு பண்டக சாலையிலும் கிடப்பில் உள்ள மின்கம்பங்கள் ஏலம் விடப்படுவதில் முறைகேடு ஆகியவை காரணமாகவே மின்வாரியம் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

மேலும் பல அலுவலகங்களில் உதவி செயற்பொறியாளர் என்ற நிலை உருவாக்கப்பட்டு கூடுதல் ஊதியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஒரு யூனிட்டுக்கு கூடுதல் கட்டணம் விதித்தால் மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படும் என்று கருதி வித்தியாசமான முறையில், பல்வகை கட்டணம் என்ற பெயரில் விஞ்ஞான ரீதியாக கட்டண உயர்வை சுமத்தியுள்ளனர். ஏற்கனவே பல இடங்களில் வீட்டு மின் உபயோகங்கள் வர்த்தக பயன்பாட்டிற்கு உள்ளதால் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

இவற்றை எல்லாம் முறையாக ஆய்வு செய்தாலே மின்வாரியத்திற்கு வருவாய் ஏற்படும். ஆனால், ஊழலுக்கும், லஞ்சத்திற்கும், முறைகேடுகளுக்கும் உயரதிகாரிகள் முதல் கீழ்மட்ட அலுவலர் வரை மின்வாரிய நலன் கருதாமல் ஊழல் அதிகரித்துள்ளதால் வாரியம் இன்றைக்கு நஷ்டமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

அது போல மின்வாரியம் தொடர்பான சேவை குறைபாடுகளும் அதிகரித்து உள்ளது. லஞ்சம் இல்லாமல் மின்வாரியத்தில் எந்த வேலைகளும் செய்ய முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

இச்சூழ்நிலையில் தனியார் நிறுவனம் போல பல்வகை கட்டணம் என்ற பெயரில் மறைமுகமாக மின் கட்டணம் உயர்வை அறிவித்திருப்பதை திரும்ப பெற்றுக் கொண்டு, மின்வாரியத்திற்கு ஏற்படும் நஷ்டத்தை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பேருந்துகளில் மகளிர்க்கு இலவச கட்டணத்தை தமிழக அரசு எப்படி ஏற்றுக் கொள்கிறதோ, அது போலவே மின்வாரியத்தில் ஏற்படும் நஷ்டத்திற்கு தமிழக அரசு உரிய மானியத்தை ஒதுக்கி, மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றார்.