அசாதாரண வளர்ச்சி கருப்பை கட்டியை அகற்றி கே.எம்.சி.ஹெச் மருத்துவர்கள் சாதனை

சமீபத்தில் 53 வயது மதிக்கத்தக்க பெண்ணின் கருப்பை கட்டி அசாதாரணமாக வளர்ந்து உயிருக்கு ஆபத்தான சிக்கலான நிலையில் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த கட்டியானது இரத்த நாளங்களை ஒட்டி இருதயம் வரை நீண்டிருந்ததது.

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அப்பெண்ணுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இருதயத்தின் வலதுபாகம் வரை கட்டியானது வளர்ந்து நுரையீரல் செயல்பாட்டையும் பாதித்ததால் பிராணவாயு தடைபட்டதால் அவருக்கு இந்த மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவருக்கு உடனடியாக அவசரகால சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் உடல்நிலை சற்று மேம்பட்ட பிறகு விரிவான ஸ்கேன் எடுக்கப்பட்டது.

ஸ்கேன் பரிசோதனையில் இருதயத்தில் ஏற்பட்ட கட்டியானது அப்பெண்மணியின் கருப்பையில் இருந்து நீண்டிருந்த கட்டி எனக் கண்டறியப்பட்டது. நிலைமையை விரிவாக ஆராய்ந்த பிறகு கேஎம்சிஹெச் அறுவை சிகிச்சை குழுவினர் உடனடியாக சிகிச்சையைத் துவக்கினர். இருதய இரத்த ஓட்டமானது இருதயம் மற்றும் நுரையீரல் செயற்கை முறையில் இயங்கும் இயந்திரத்தின் உதவியுடன் இதயம் துடிக்கும்போதே கட்டியின் ஒரு பாகம் வெளியே எடுக்கப்பட்டது. அடிவயிற்றில் துளையிட்டு கருப்பை பாகம் வெளியே எடுக்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் 5 மணி நேரம் ஆனது. ஒருவாரத்தில் நோயாளி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தற்போது அவர் நலமாக உள்ளார்.

கருப்பை அல்லது கருப்பை இரத்த நாளங்களில் உருவாகும் கட்டியானது சிறிது சிறிதாக வளர்ந்து இருதயம் வரை நீளும்போது இதுபோன்ற அசாதாரண நிலை ஏற்படக்கூடும். இதுபோன்ற கட்டியானது புற்றுநோயாக மாறுவது மிகவும் அரிது. உலகில் இதுபோன்ற கேஸ்கள் 100-க்கும் குறைவாகவே உள்ளன. அறுவை சிகிச்சையின்போது அதிக இரத்தப் போக்கு அல்லது அறுவை சிகிச்சையின்போது கட்டியானது விடுபட்டு இரைப்பையில் தங்கிவிட்டால் நோயாளியின் உயிருக்கு ஆபத்தாக முடிந்துவிடும். ஆகவே இதுபோன்ற அறுவை சிகிச்சையை மிகவும் கவனத்துடன் திட்டமிட்டு செய்யவேண்டும்.

இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரசாந்த் வைத்யநாத், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஃபிரோஸ் ராஜன், இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் லாரன்ஸ் ஜேசுராஜ் மற்றும் மயக்கமருந்து டாக்டர் காப்பியன் ஆகியோர் சிறந்த முறையில் செயல்பட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமான நடைபெற உதவினர்.

உயிருக்கே ஆபத்தான நிலையில் மிகுந்த சிக்கலான நிலையில் நோயாளிகள் வந்தாலும் உடனடியாக செயல்பட்டு மிகுந்த திறமையுடன் விலைமதிப்பிலாத மனித உயிர்களை காப்பாற்றுவதில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றி புதிய மற்றும் அரிய சாதனைகள் நிகழ்த்திவரும் மருத்துவக் குழுவினரை கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா பழனிசாமி பாராட்டி தனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.