ஆர்.எஸ்.புரத்தில் புக்சோர் நிறுவனத்தின் புத்தக கண்காட்சி துவக்கம்

புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட சிறந்த மற்றும் பிரத்யேக புத்தகங்களின் விற்பனையில் முன்னணி ஆன்லைன் நிறுவனமாக புக்சோர் விளங்கி வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் புதிய ‘லாக் தி பாக்ஸ் ரீ லோடட்’ எனும் விற்பனை கண்காட்சி கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ராஜஸ்தான் அரங்கில் துவங்கப்பட்டுள்ளது.

ஜூலை 22 துவங்கி 31 ஆம் தேதி வரை பத்து நாட்கள் இந்த கண்காட்சி நடைபெறுகிறது. இதில் எந்தவொரு தனியான புத்தகத்திற்கும் பணம் செலுத்த வேண்டியதில்லை. அதற்கு பதிலாக, ஒரு பெட்டிக்கு மட்டும் பணம் செலுத்தி, அந்த பெட்டியில் எவ்வளவு புத்தகங்கள் கொள்ளுமோ அதற்கேற்ற புத்தகங்களை எடுத்துச் செல்லலாம்.

இதில் 10 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. கதைப் புத்தகங்கள், வரலாற்றுப் புத்தகங்கள், திகில், காதல், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்கள், சாகசம், அறிவியல் சம்பந்தப்பட்ட புனைக்கதை புத்தகங்கள் உள்ளிட்ட இன்னும் ஏராளமானவை இந்த விற்பனை கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

இது குறித்து செய்தியாளர்களிடம் புக்சோர் நிறுவனர் வித்யுத் சர்மா கூறுகையில்: லாக் தி பாக்ஸ் ரீலோடட் நிகழ்ச்சியை ஏற்கனவே பெங்களூர், ஐதராபாத், கொல்கத்தா, புனே, இந்தூர் உள்ளிட்ட நகரங்களில் நடத்தியுள்ளோம். இதன் தொடர்ச்சியாக கோவையில் இந்த சலுகை விலை புத்தக விற்பனை மேளாவை துவக்கியுள்ளோம்.

இந்த சலுகை விற்பனையில் ஒடிசியஸ் பெட்டி, பெர்சியஸ் பெட்டி மற்றும் ஹெர்குலஸ் பெட்டி என மூன்று வெவ்வேறு அளவிலான பெட்டிகளில் இருந்து புத்தகப் பிரியர்கள் தங்களுக்கு விருப்பமான பெட்டியை தேர்வு செய்யலாம்.

ஒடிசியஸ் பெட்டியின் விலை 1199 ரூபாயும், பெர்சியஸ் பெட்டி விலை 1799 ரூபாயும், ஹெர்குலஸ் பெட்டியின் விலை 2999 ரூபாய் ஆகும். இந்த பெட்டிகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யும் புத்தக வாசிப்பாளர்கள் அந்த பெட்டி முழுவதுமாக நிறையும் வகையில் அவர்கள் விரும்பும் புத்தகங்களை தேர்வு செய்து அந்த பெட்டியில் வைத்து எடுத்துச் செல்லலாம்.

குறிப்பாக இளம் தலைமுறையினரின் வாசிப்புத் திறனை ஊக்குவிப்பதற்காக குறைந்த விலையில் ஏராளமான புத்தகங்களை இங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.