தேசிய திரைப்பட விருதுகள்: 5 விருதுகளை குவித்த சூரரை போற்று

2020-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த திரைப்படமாக சூரரை போற்று தேர்வாகியுள்ளது. சிறந்த நடிகருக்கான விருது நடிகர் சூர்யாவிற்கும், சிறந்த நடிகைக்கான விருது அபர்ணா பாலமுரளிக்கும், சிறந்த இசையமைப்பாளர் விருது சூரரைப் போற்று திரைப்படத்திற்காக ஜி.வி.பிரகாஷுக்கும், சிறந்த திரைக்கதைக்கான விருதும் சூரரை போற்று திரைப்படத்திற்கே வழங்கப்பட்டது.

திரைப்படங்களை எடுக்க உகந்த மாநிலமாக மத்திய பிரதேசம் தேர்வானது. தமிழ் மொழியில் சிறந்த திரைப்படமாக சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படமும், அப்படத்தின் படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்துக்கு சிறந்த படத்தொகுப்புக்கான விருது அறிவிக்கப்பட்டது.

இதேபோல மண்டேலா திரைப்படத்திற்காக சிறந்த வசனகர்த்தாவிற்கான விருது மடோன் அஸ்வினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோலவே சிறந்த சண்டைக்கான விருது மலையாளத்தில் வெளியான ஐயப்பனும் கோஷியும் திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது. அப்படத்தில் நடித்த பிஜு மேனனுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும், சிறந்த இயக்குனருக்கான விருது இந்தப் படத்தின்இயக்குனர் சச்சிதானந்தனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.