நாட்டின் எதிர்காலமே! விழித்திருங்கள் !

இன்றைய இளைஞர்களின் பார்வையில் அவர்கள் செய்துவரும் அனைத்து செயல்களும் அவர்களை  திகைப்பூட்டும் வகையிலே அமைகிறது. ஏதிர்காலத்தை பற்றிய நோக்கமும், சிந்தனை பற்றிய விழிப்புணர்வும் அவர்களிடம் இல்லை. நமது நாட்டில் இளைஞர்களின் பங்கு என்னவாக இருக்கும் என்ற  கேள்வி பெரிதும் உருவாகியுள்ளது. “நீரில் மூழ்கிக்கிடக்கும் காகிதக் கப்பலைப்போல் ” போதையிலும்  இணையத்திலும் இக்கால இளைஞர்களின் நிலை மூழ்கி கிடக்கிறது. கல்வியிலும், கலைகளிலும் கவனத்தை செலுத்தாமல் கலவரத்தில் இறங்குகின்றனர்.

இளம் வயதினர் பலரும் மது, புகைத்தல் மற்றும் போதைப் பொருட்கள் பாவனையில் இறங்கி போலிச் சுகம் காண முயல்கிறார்கள். ‘ஒருக்கால் பாவித்துப் பார்ப்பம்’ என இவற்றில் விளையாட்டாக இறங்கிவிட்டால் கூட மீள்வது கடினமாகும். ‘சும்மா குடிச்சுப் பாரடா’ என நண்பர்களின் தூண்டுதலால் விளையாட்டாகப் பரீட்சிக்கும் உங்கள் செயல் மீளாக் குளியில் தள்ளிவிடும் என்பதை மறக்கக் கூடாது. மற்றவர்கள் முகத்திற்காக அவர்களது வேண்டுதலுக்காக இவற்றில் இறங்க வேண்டாம்.’மாட்டேன், வேண்டாம்’ என முகத்திற்கு நேரே மறுக்கும் தைரியத்தை வளர்த்துக் கொள்வது இளம் வயதினரின் அவசியமாகும். இதற்கான பயிற்சி பெற்றோர்கள் இடமிருந்து தான் வரவேண்டும். பிள்ளைகளின் வளர்ப்பில் பெற்றோர்கள், ஒரு ஆசிரியரைப்போல் கண்காணித்து வளர்ப்பதே  ஏதிர்காலத்தில் அப்பிள்ளையின் வளர்ச்சிக்கு உறுதுணையாய் அமையும்.

இளைஞர்கள்  நாட்டிற்காகவும் வீட்டிற்காகவும் செய்ய வேண்டிய தார்மீகப் பொறுப்பு நிறைய உள்ளது. ஆனால் இவற்றை முன்னெடுப்பதற்கு அஸ்திவாரம்  உங்கள் நலன் மட்டுமே. அது நல்ல நிலையில் இருக்க வேண்டும். நலம் என்பது உடல் நலம் மட்டுமல்ல. உடல், உள்ளம், சமூக நோக்கு, ஆன்மீகப் பார்வை யாவும் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஒருவர் ஆரோக்கியமாக இருப்பதாகக் கொள்ளலாம்.

சூதாட்டங்களும் போதைப் பழக்கங்களும் இக்கால இளைஞர்களின் கனவுகளை பெரிதும் பாதிக்கின்றது. மது, போதைப் பொருட்கள், சிகரட் போன்றவை எங்கும் கேள்வியின்றி விற்பனையாவது ஆபத்தானதாகும். முக்கியமாக இளம் வயதினருக்கு வழங்கக் கூடாது. சட்டங்களால் மட்டும் இவற்றை அமுல் படுத்த முடியாது. சமூகத்தில் இவற்றிக்கு எதிரான உணர்வு வளர்க்கப்பட வேண்டியது அவசியமாகும்.

இளம் வயதில் தொடங்கும் பணிகள் அனைத்தும் ஒரு சாதனையாகவே அமையும். அதனை அறிந்து செயல்பட வேண்டும். நிறைய கடமைகளையும் பொறுப்புக்களையும் அறிந்து அவற்றை செயல்படுத்தும் கடமை இளைஞர்களின் கையில்தான் உள்ளது. இளைஞர்களை புறக்கணித்து விட்டு எதுவும் நடைபெறாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். காந்தியடிகள் முதல் அறிஞர் அண்ணா வரை அனைவரும் இளம்வயதிலேயே பொதுப்பணிக்கு தங்களை அர்பணித்துக் கொண்டவர்கள்தாம். சாதனையாளர்களின் சரித்திரம் எல்லாம் இப்படித்தான் இருக்கிறது.

நாம் தோற்றுப் போகலாம், அதன் மறைபொருள் வெற்றி, என்பதாகும். தோற்றுப்போவதால் நம்மை நாமே தாழ்த்திக்கொள்வது முறையற்றது. “சிந்தித்து செயல்பட்டால் வெற்றி நம் கையில்”. ஏனென்றால் இந்தியாவின் எதிர்காலமே இளைஞர்களின் கையில் தான். எதையும் திறந்த மனத்தோடும் விட்டுக் கொடுப்புகளுடனும் செய்து சுமுகமாக தீர்வு காண்பதற்கான பயிற்சியை கல்வி மட்டுமின்றி ஆன்மீக ஸ்தாபனங்களும் செய்ய முடியும். எனவே காத்திருக்கும் எதிர்காலத்தை ஒளிமயமாகவும், பொன்விளைவதாகவும், மகிழ்ச்சி நிறைவதாகவும் ஆக்க முயலுங்கள். அதற்கு ஏற்றவகையில் உங்கள் உடலையும் உள்ளத்தையும் நலமாகப் பேணுங்கள். நாளைய உலகம் உங்கள் கையில் உங்களுக்காக மட்டுமல்ல முழு உலகத்திற்காகவும்.

Story By – Sowndharya Sakthi