குடியரசுத் தலைவராக ஜெயிப்பது யாரு?

குடியரசுத் தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் வாக்கினை பதிவு செய்துள்ளனர்.

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வரும் 24ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடக்கிறது. தேசிய ஜனநாய கூட்டணியின் வேட்பாளராக திரௌபதி முர்மும்,  எதிர்க்கட்சி சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் களத்தில் உள்ளனர்.

சென்னையில் முதல் வாக்கினை முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு செய்தார். காலை 10 மணி தொடங்கி மாலை 5 மணி வரை நாடாளுமன்ற அலுவலகம், மாநில சட்டசபை அலுவலகங்களில் இதற்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

தமிழகத்தில் சென்னை தலைமை செயலகத்தில் குடியரசு தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாநில தலைமை தேர்தல் அதிகாரி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப் பெட்டி டெல்லியில் இருந்து ஏற்கனவே கொண்டு வரப்பட்டு, பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவின் போது சம்பந்தப்பட்ட, அதிகாரிகள் மற்றும் தேர்தல் முகவர்களின் முன்னிலையில் அது திறக்கப்பட்டு சோதனை செய்யப்படும். இன்று காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பெட்டி பலத்த பாதுகாப்புடன் விமானத்தில் டெல்லி கொண்டு செல்லப்படும்.

குடியரசுத்தலைவர் தேர்தலுக்காக சென்னை தலைமை செயலகத்தில் எம்பிக்கள்  மற்றும் எம்எல்ஏக்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 234 சட்டமன்ற உறுப்பினர்களும், சிறப்பு அனுமதி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்குகளை செலுத்தவுள்ளனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் வாக்கு மதிப்பு 176, நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு 700. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூலை 21ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளது