சி.எஸ்.ஆர் நிதியின் கீழ் செலக்கரிச்சலில் ஊரக வளர்ச்சித் திட்டம்

கோவை சுல்தான்பேட் ஒன்றியத்தைச் சேர்ந்த செலக்கரிச்சல் கிராமத்தில் ‘ரூரல் ரைசிங்’ என்ற பெயரில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டத்தை யுனைடட் வே ஆஃப் பெங்களூரு நிறுவனத்துடன் இணைந்து அல்ஸ்டாம் நிறுவனம் தொடங்கியது. அல்ஸ்டாம் நிறுவனம் தனது சிஎஸ்ஆர் நிதியின் கீழ் இத்திட்டத்தை தொடங்கியது.

இச்செயல்திட்டத்தின் கீழ் இரு அங்கன்வாடி மையங்களில் புதிய வசதிகளும், உட்கட்டமைப்பு பணிகளும் செய்யப்பட்டிருக்கின்றன. இக்கிராமத்தில் உள்ள ஒரு அரசு ஆரம்பப் பள்ளிக்கு மதிய உணவு சமையலறை கட்டித் தரப்பட்டிருப்பதுடன், ஒரு கழிப்பறையும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.

கூடுதலாக, ஒரு சமுதாய கழிப்பறை இங்கு கட்டப்பட்டிருக்கிறது. மாற்றுத்திறனாளிகளும் எளிதில் பயன்படுத்தும் விதத்தில் கழிப்பறை அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் வசிக்கும் சுமார் 500 குடும்பங்களின் ஆரோக்கியத்தையும், தூய்மையான சூழலையும் மேம்படுத்த இச்செயல்திட்டம் உதவும்.

இவ்வளாகத்தை பஞ்சாயத்து நிர்வாகத்திடம் அல்ஸ்டாம் கோயம்புத்தூர் ஆலையின் நிர்வாக இயக்குனர் செல்வகுமார் மற்றும் யுனைடட் வே ஆஃப் பெங்களூருவின் செயல்திட்ட இயக்குனர் ஸ்ரீராம் அனந்தநாராயணன் ஒப்படைத்தனர்.

அல்ஸ்டாம் அமைவிட நிர்வாக இயக்குனர் செல்வகுமார் கூறுகையில்: எங்களது சி எஸ் ஆர் திட்டங்களின் கீழ் வளர்ச்சித் தேவைகள் அதிகமுள்ள கிராமங்களில் சிறந்த கல்வி வழங்குதல், சுகாதார மேம்பாட்டிற்கான பணிகளைச் செய்தல் மற்றும் சிறந்த மருத்துவ வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற பல பணிகளை செய்து வருகிறோம். இதன் மூலம் எங்களது நிறுவனம் செயல்பட்டு வரும் இடங்களைச் சுற்றியுள்ள மக்கள் சிறப்பான சூழலில் வாழ்வதற்கான வழிகளை ஏற்படுத்த முடிகின்றது.

இந்த முயற்சியின் அங்கமாக யுனைடட் வே பெங்களூரு நிறுவனத்துடன் இணைந்து இந்த கிராமத்தின் தேவைகளை பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்களோடு இணைந்து கண்டறிந்து அவற்றை தேவை அடிப்படையில் வரிசைப்படுத்தி சிறந்த முறையில் நிறைவேற்றியுள்ளோம் என்று கூறினார்.