விவசாயத்தில் திட்டமிடல் அவசியம்! – உழவே தலை நிகழ்வில் வல்லுநர்கள் கருத்து

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை, சார்பாக நான்காம் ஆண்டாக ‘உழவே தலை’ எனும் ஒருநாள் வேளாண் கருத்தரங்கம் நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வினை குத்து விளக்கேற்றி சிறுதுளி அமைப்பைச் சேர்ந்த வனிதா மோகன், இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணைய்யன், உழவே தலையைச் சேர்ந்த உறுப்பினர்கள் துவக்கி வைத்தனர். பின்னர் இந்திய தொழில் வர்த்தக சபையின் தலைவர் பாலசுப்ரமணியன் வரவேற்புரை வழங்கினார்.

மரம் வளர்ப்பு மற்றும் அதன் பலன்களைப் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் இந்த கருத்தரங்கம் அமைந்திருந்தது.

தோட்டக்கலையில் பழ வகை மரங்களின் பலன்கள் அதற்குண்டான சந்தை, மண்வளம், நீர்வளம், சரியான மர வகையை தேர்ந்தெடுப்பது, குறுகிய கால மரங்கள், பழங்களை வளர்ப்பது, சந்தைப்படுத்துவது,  மரங்களை வளர்ப்பதற்கு உண்டான பொருளாதார ஆலோசனை, பணம் தரும் மரம் ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது. அனுபவம் பெற்ற வல்லுநர்கள் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பேசினர்.

உழவே தலையின் நோக்கம் மற்றும் பயன்கள் குறித்து விவசாயி மணி சுந்தர் கூறுகையில்: இந்திய தொழில் வர்த்தக சபை வேளாண்மையை முதன்மை தொழிலாக கருதுவதால் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் இந்த கருத்தரங்கை நடத்துகிறது.

தமிழகம் நீர் பற்றாக்குறை உள்ள மாநிலமாக உள்ளது. எனவே அதிக நீர் தேவைப்படாத விவசாய பயிர்களை தேர்ந்தெடுப்பது அவசியம். நீர் மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை, பருவநிலை மாற்றம் போன்ற சிக்கல்களை விவசாயிகள் எதிர்கொள்கின்றனர். எனவே திட்டமிட்டு வேளாண்மை செய்வது சவலாக உள்ளது. இதனால் விவாசயிகள் கூடுதல் வருமானத்தை ஏற்படுத்திக் கொள்ளும் தேவை உள்ளது.

நகர்ப்புறங்களில் இளைஞர்களிடம் மர வளர்ப்பு பற்றிய ஆர்வம் உள்ளதை காண முடிகிறது. ஆனால் போதிய விழிப்புணர்வு இன்மையும் காணப்படுகிறது. மரத்தை எப்படி நட வேண்டும், எங்கு நடக்கூடாது போன்ற விழிப்புணர்வு அவசியம் தேவைப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டே மரப்பயிர் சாகுபடி, மரம் வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்நிகழ்வு அமைந்துள்ளது.

நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக ராயல் கிளாசிக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சிவராம் கலந்து கொண்டு பேசுகையில்: விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கும் விதமாக இந்த நிகழ்வு உள்ளது. கோவை அனைத்து தொழில் வளமும் நிறைந்தது. ஆனால் அடிப்படை தொழிலான விவசாயத்தை மக்கள் மறந்து வருகின்றனர்.

எங்களது வனத்துக்குள் திருப்பூர் என்ற திட்டம் மூலமாக 13 லட்சம் மரங்களை நட்டுள்ளோம். இதன் மூலம் காற்று மாசை கட்டுப்படுத்துவதே தங்களது நோக்கம் என்பதையும் நிகழ்ச்சியில் பதிவிட்டார்.