புதிதாக நிறுவப்பட்ட தேசிய சின்னத்தை அவமதிப்பதாக சர்ச்சை

புதிதாக அமைக்கப்பட்டுள்ள நான்கு சிங்கங்கள் கொண்ட தேசிய சின்னம், அவமதிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இந்தியாவின் தேசிய சின்னமான நான்முகச் சிங்கம், புதிய நாடாளுமன்றத்தின் மேற்பரப்பில் நிறுவப்பட்டுள்ளது. 6.5 மீட்டர் உயரம், 9,500 கிலோ எடையில் வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட தேசிய சின்னத்தை தாங்கி பிடிக்க 6,500 கிலோ எடையில் 4 புறமும் எஃகு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தேசிய சின்னத்தை பிரதமர் மோடி  திறந்து வைத்தார். இந்த நிலையில், புதிய சின்னம் முன்பு போல் இல்லை எனவும் மாற்றியமைக்கப்பட்டு இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை சாடியுள்ளன.

புத்தபிரானின் முதல் உரை நிகழ்ந்த அந்த புண்ணிய தலத்தில் மெளரிய அரசன் அசோக சக்ரவர்த்தி நான்கு சிங்கங்களைக் கொண்ட தூணை அமைத்தார். நாடு சுதந்திரம் அடைந்ததும் சாரநாத் தூணில் இடம்பெற்ற அந்த நான்கு சிங்கங்கள் தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. அது அரசு வெளியிட்ட ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களிலும் இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையில் அந்த சிலையை சுற்றி தற்போது சர்ச்சை கிளம்பியுள்ளது. சாரநாத் தூணில் காணப்படும் சிங்க உருவம் சாந்தமானதாக இருக்கும். ஆனால், புதிய தேசிய சின்னத்தில் இடம்பெற்றுள்ள சிங்க முகம் சிங்கங்கள் வாயைப் பிளந்து இருப்பது போன்று காணப்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.