பைக்கில் போகும்போது கூட வேலையா?

இன்றைய அவசர உலகில் அலுவலக வேலைகளுக்கு இடையே தங்களது சொந்த வேலைகளை கவனித்துக் கொள்ளவே பலருக்கும் நேரம் இருப்பதில்லை. இதற்கு பணிசுமையும் ஒரு காரணமாக இருக்கலாம். இதற்காக அலுவலகம் அல்லது வீட்டில் வேலை பார்த்தால் கூட பரவாயில்லை. ஆனால் பைக்கில் செல்லும்போது கூட ஒரு நபர் வேலை பார்த்துக் கொண்டே செல்லும் புகைப்படம் ஒன்று லிங்க்டின் தளத்தில் பகிரப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பெங்களூரு நகரத்தின் மேம்பாலம் ஒன்றின் நடுவே நடந்தேறி இருக்கிறது. அதில் ஒரு நபர் பைக் ஓட்ட, பின்னால் அமர்ந்திருப்பவர் லேப்டாப் வைத்து வேலை செய்யும் செய்வது போல தெரிகிறது. இந்தப் படத்தை ஹர்ஷ்மீத் சிங் என்பவர் பதிவிட்டு கூறியிருப்பதாவது:

பெங்களூரு நகரம் சிறந்ததாக இருக்கிறதா அல்லது மோசமாக இருக்கிறதா? பெங்களூரின் மேம்பாலம் ஒன்றில் இரவு 11 மணிக்கு, பைக்கில் இருந்தபடியே ஒருவர் லேப்டாப் வைத்து வேலை செய்கிறார். ஒரு மேலதிகாரியாக உங்களால் உங்கள் சக ஊழியர்களின் பாதுகாப்பை விலையாக வைத்து தான் அவர்களுக்கான வேலையை முடிக்கும்படி பயமுறுத்தினால், நீங்கள் மீண்டும் சிந்திக்க வேண்டிய நேரம் இது.

குறிப்பாக நீங்கள் அதிகாரத்தில் ஒரு பெரிய பொறுப்பில் இருந்தால் ‘IT’S URGENT’ மற்றும் ‘DO IT ASAP’ என்ற சொற்றொடரை மிகவும் கவனமாகப் பயன்படுத்துங்கள். இந்த வார்த்தைகள் உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களின் வாழ்க்கையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது உங்களுக்குத் தெரியாது என பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவைக் கண்ட பலரும், ஒருவேளை டிக்கெட் புக்கிங் செய்வது போன்ற வேறு ஏதேனும் சொந்த வேலையில் கூட ஈடுபட்டிருக்கலாம் எனவும் இதற்கு கருத்து தெரிவிக்கின்றனர். இதற்கு ஆதரவான மற்றும் எதிரான என இருவேறு கருத்துக்களை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.