மாணவர்களிடையே அரசியலை புகுத்துகிறார் ஆளுநர் – அமைச்சர் பொன்முடி குற்றசாட்டு

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களின் சந்திப்பில் அவர் கூறியதாவது: பல்கலையில் மாணவர்களிடையே ஆளுநர் அரசியலை புகுத்துகிறார் என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நான் மதுரை பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள போவதில்லை.

சிறப்பு அழைப்பாளராக யாரை அழைப்பது என்பது உள்ளிட்ட விஷயங்களை உயர் கல்வித் துறையிடம் கலந்தாலோசிக்க வேண்டும். பின்னர், இறுதி செய்யப்படுபவர்களில் ஒருவரைதான் அழைக்க வேண்டும். ஆனால், அதுபோல எதுவும் செய்யப்படவில்லை. பட்டமளிப்பு விழாவில் முதலில் வேந்தர், இணை வேந்தர், சிறப்பு பேச்சாளர் என்ற முறையில் இருக்க வேண்டும். இதில் கவுரவ விருந்தினர் என்ற நபர் தேவையில்லை. துறைக்கு சம்பந்தம் இல்லாத மத்திய இணை அமைச்சர் முருகனை ஆளுநர் இங்கு அழைப்பது ஏன்?

ஒன்றிய அரசால் நியமிக்கப்படுவதால் ஒன்றிய ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. மாநில அரசின் கொள்கைகளை, திட்டங்களை நிறைவேற்றுவதே ஆளுநரின் கடமை. அவர் ஆளுநராக செயல்பட வேண்டும். ஆனால், அவரோ பாஜகவின் பிரசார பீரங்கிபோல செயல்படுகிறார். என்று பேசினார்.