மக்கள் தொகையில் முதலிடத்தை பிடிக்கும் இந்தியா – ஐ.நா. தகவல்

அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனாவை முந்தி, வரும் 2023 ஆம் ஆண்டில் இந்தியா முதலிடத்தைப் பெறும் என 36 வது உலகமக்கள் தொகை தினத்தில் (ஜூலை 07) ஐக்கிய நாடுகளின் சபையின் அறிக்கை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் பிரிவு உலக மக்கள் தொகை தொடர்பாக ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அந்த தகவலின் படி, 2022 நவம்பர் மாதத்தில் ஒட்டுமொத்த உலக மக்கள் தொகை எண்ணிக்கை 8 கோடியை எட்டும் என தெரிவித்துள்ளது. 2030 இல் உலக மக்கள் தொகை எண்ணிக்கை 850 கோடியாகவும், 2050 ஆம் ஆண்டில் 970 கோடியாகவும், 2080 ஆம் ஆண்டில் 1400 கோடியாகவும், அதன் பின் 2100 ஆம் ஆண்டு வரை உலக மக்கள் தொகையின் எண்ணிக்கை இதே நிலையில் தொடரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மக்கள் தொகை 141 கோடியாகவும், சீனாவின் மக்கள் தொகை 142 கோடியாகவும் உள்ளது. தற்போது மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவை மிஞ்சி, அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா முதலிடத்தைப் பெறும் எனவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

2050 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 166 கோடியாகவும், அதேவேளை, சீனாவின் மக்கள் தொகை 131 கோடியாகவும் இருக்கும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2050 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் பாதி அளவானது இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, நைஜீரியா, தான்சானியா ஆகிய எட்டு நாடுகளில் தான் இருக்கும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.