அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட புதிய விதிகள்

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்த செயற்குழு கூட்டத்தில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவுள்ள 16 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில், அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிக்கு யார் போட்டியிட முடியும் என்பது தொடர்பாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் புதிதாக துணைப் பொதுச் செயலாளர் பதவியும் உருவாக்கப்பட்டுள்ளது. 4 மாதங்களில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான புதிய விதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவை: பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவார். இந்தத் தேர்தலில் கலந்துகொள்ள, 10 ஆண்டுகள் தொடர்ந்து அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும். தலைமைக் கழக பொறுப்புகளில் தொடர்ந்து 5 ஆண்டுகளின் பணியாற்றி இருக்க வேண்டும்.

போட்டியிடுபவர்களை 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். 10 மாவட்டச் செயலாளர்கள் வழிமொழிய வேண்டும். மாவட்டச் செயலாளர் ஒரு வேட்பாளரை மட்டுமே முன்மொழியவும், வழிமொழியவும் முடியும். இந்த தகுதிகளை பூர்த்தி செய்பவர்கள் அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடலாம்.
துணைச் பொதுச் செயலாளர்களை பொதுச் செயலாளர் நியமனம் செய்வார். எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.