இடைக்கால பொதுச்செயலர்  ஆகிறாரா இ.பி.எஸ்?

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி இடையே அதிகாரப் போட்டி உச்சகட்டத்தை அடைந்துள்ளது. அதிமுகவில் இரு தரப்பு இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் அரசியல் நகர்வுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஒற்றைத் தலைமையை கட்சிக்குள் கொண்டுவர வேண்டும், அதுவும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலேயே ஒற்றைத் தலைமை இருக்க வேண்டும் என எடப்பாடி ஆதரவாளர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகின்றனர். பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஒப்புதலுடன் கடந்த ஜூன் 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை கொண்டுவர முயன்றபோது, அது சென்னை உயர் நீதிமன்ற இருநபர் அமர்வு தீர்ப்பு காரணமாக முடியாமல் போனது.

இதையடுத்து, அந்த பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்ட 23 தீர்மானங்களும் ரத்து செய்யப்பட்டதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாகவும் அவர் பத்திரிகையாளர்களிடம் ஜூன் 24 ஆம் தேதி தெரிவித்தார். மேலும், ஓ.பன்னீர்செல்வம், பொருளாளராகவும், எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலராகவும் மட்டுமே தொடர்வதாகவும் சி.வி.சண்முகம் அறிவித்தார். எனவே, ஜூலை 11 இல் நடக்கும் பொதுக்குழுவை அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூட்டுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சண்முகம் தெரிவித்தார்.

இந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலராக தேர்வு செய்வதற்கான அனைத்து நகர்வுகளையும் எடப்பாடி ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர். ஒருங்கிணைப்பாளராக இருக்கும் தனது ஒப்புதல் இன்றி நடக்கும் பொதுக்குழு செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் அழுத்தம் திருத்தமாக தெரிவித்து வருகிறார். மேலும், ஓ.பி.எஸ், இ.பி.எஸ். இடையிலான அதிகாரப் போட்டி நீதிமன்ற வாசலுக்கு சென்றுவிட்டது. தமிழ்மகன் உசேனை தேர்வு செய்தது சென்னை உயர் நீதிமன்ற இருநபர் அமர்வு தீர்ப்புக்கு எதிரானது என ஓ.பன்னீர்செல்வம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதற்கிடையே இரு நபர் அமர்வு தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கில் உள்கட்சி விவாகரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறி இரு நீதிபதி அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது.

இதே காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வியூகம் அமைத்துகொடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள சுனிலை, எடப்பாடி தரப்பு தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது. இதனால் பாஜக மேலிடம் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தெரிகிறது. இதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு எடப்பாடி தரப்புக்கு சாதகமாக வெளியான அன்றே எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடந்தது.

இது ஒருபுறம் இருக்க, மாநில அரசும் முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளது. தொடர்ந்து சோதனையும் நடத்தி வருகிறது.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பில், வேறு ஏதும் நிவாரணம் வேண்டும் என்றால் உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டிருந்ததால் ஜூலை 11 இல் நடக்கும் பொதுக்குழுவுக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார் ஓ.பன்னீர்செல்வம். வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி பதவிகள் காலாவதியாகவில்லை என்ற கருத்தை தெரிவித்தது.

நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறும்போது, தற்போதைக்கு தற்காலிக பொதுச்செயலரை தான் தேர்வு செய்கிறோம். மீண்டும் நிரந்தர பொதுச்செயலருக்கு தேர்தல் நடக்கும், அதில் பன்னீர்செல்வம் போட்டியிடலாம் என்றும் கூறியிருந்தனர். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இப்பொதுக்குழுவை அனுமதித்தால் தனது அரசியல் வாழ்வுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும் என தெரிவித்தனர்.

இந்நிலையில், பொதுக்குழு நடந்தால் கூட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கிறதா என்பது முக்கியமான விஷயம். 1997 இல் ஜெயலலிதா, திருநாவுக்கரசு இடையே முரண்பாடு ஏற்பட்டு தேர்தல் ஆணையத்தை அணுகும் நிலை உருவானது. அப்போது மொத்தமுள்ள 14 அதிமுக  மாநிலங்களவை உறுப்பினர்களில் 7 பேரும் திருநாவுக்கரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். மாநிலங்களவை குறிப்பேட்டில் கூட  அதிமுக (ஜெ), அதிமுக (திரு) என பதிவு செய்யப்பட்டது.

அதேபோல, தமிழ்நாடு, புதுவை, கர்நாடகம் ஆகியவற்றில் மொத்தம் இருந்த 8 அதிமுக எம்.எல்.ஏ.க்களில் 4 பேர் திருநாவுக்கரசை ஆதரித்தனர். தமிழகத்தில் 4 எம்.எல்.ஏ.க்களில் பி.ஆர்.சுந்தரம், தாமரைக்கனி, கருப்பசாமி ஆகியோர் ஜெயலலிதாவுடனே இருந்தனர். மேலும், கட்சியின் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மத்தியிலும் கணிசமான ஆதரவை திருநாவுக்கரசர் பெற்றிருந்தார். ராஜகண்ணன், சைதை துரைசாமி போன்ற எம்.ஜி.ஆர் கால நிர்வாகிகள் திருநாவுக்கரசுடன் இருந்தனர்.

ஆனால், தேர்தல் ஆணையத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது 1994 இல் தொண்டர்களால் ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டதால், பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட திருநாவுக்கரசை அங்கீகரிக்க இயலாது எனக்கூறி இரட்டை இலை சின்னம், கட்சிக்கொடியை ஜெயலலிதாவுக்கே தேர்தல் ஆணையம் வழங்கியது.

இப்போது ஓ.பி.எஸ், இ.பி.எஸ் என இருவருமே தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டதால் பொதுக்குழுவின் தீர்மானத்தை ஏற்று இருவருரின் பதவிகளை நீக்குவது சிரமம் தான். தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை பொதுக்குழுவை விட ஒன்றரை கோடி தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்ட தலைமையை ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. மேலும், வருமானவரி சோதனைகள் நடப்பதை பார்க்கும்போது இருவரும் சேர்ந்தால் மட்டுமே இரட்டை இலை கிடைக்கும் சூழல் உள்ளது. ஏற்கனவே இருதரப்பு குழப்பம் காரணமாக 32 ஊரக உள்ளாட்சிகளில் அதிமுக போட்டியிடவில்லை. பதவி காலாவதியாகிவிட்டதாக எடப்பாடி தரப்பு சொன்னாலும் நடைமுறையில் அது சாத்தியம் இல்லை. இருவரும் இன்றி இரட்டை இலை கிடைக்காது என்பதால் தேர்தலில் போட்டியிடவில்லை.

அதேநேரத்தில் பன்னீர்செல்வம் தரப்பில் ஆட்கள் குறைவாக இருப்பது உண்மைதான். ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ்பாண்டியன், வைத்தியலிங்கம், முன்னாள் மேயர் கோபாலகிருஷ்ணன், தேனி மாவட்டச் செயலர் சையதுகான், அரியலூர் மாவட்டச்செயலர் ஆர்.டி.ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தஞ்சை வடக்கு மாவட்டச்செயலர்  சுப்பிரமணியம், செய்தி தொடர்பாளர்கள் கோவை செல்வராஜ், மருது அழகுராஜ் போன்றவர்களின் ஆதரவு மட்டுமே உள்ளது.

ஏற்கனவே தர்மயுத்தம் நடத்தும்போது இருந்த நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, செம்மலை, மைத்ரேயன், மாபா பாண்டியராஜன், தச்சை கணேசராஜா உள்ளிட்ட அனைவரும் எடப்பாடி ஆதரவாளர்களாகவே மாறிவிட்டனர்.

இந்நிலையில், இப்போது பொதுக்குழு நடந்து இடைக்கால பொதுச்செயலராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தாலும் அது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்க முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இருவருமே ஒன்றரை கோடி தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் என்பதால் எடப்பாடி ஆதரவு பொதுக்குழுவின் தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்குமா என்பது சந்தேகம் தான்.

இதுவரை தமிழக தேர்தல் வரலாற்றில் நடந்த கட்சி பிளவுகளை பார்க்கும்போது 1977 இல் எம்.ஜி.ஆர்  – கருணாநிதி, மூப்பனார் –  – பா.ராமச்சந்திரன், 1989 இல் ஜானகி – ஜெயலலிதா, 1996 இல் கருணாநிதி – வைகோ, 2019 இல் ஓ.பி.எஸ் –

இ.பி.எஸ்.க்கு எதிராக டிடிவி.தினகரன் ஆகியவற்றில் இரு சக்திகளுமே வாக்குகளை எடுத்துள்ளனர். குறிப்பாக வைகோ – கருணாநிதி பிளவில் கருணாநிதி ஏற்கனவே முதல்வராக இருந்து தலைவராக உருவாகிவிட்டதால் வைகோவால் பெரிய அளவு வாக்கு வலிமையை காட்ட முடியவில்லை. தினகரன், ஓ.பி.எஸ் பிளவில் முதலில் மக்களவைத் தேர்தல் வந்ததால் தினகரனால் பிரதமர் வேட்பாளரை நிறுத்தி ஒரு அணியை கட்டமைக்க முடியவில்லை. ஆட்சியை தொடர்ந்தது எடப்பாடிக்கு ஒரு பெரிய பலமாக அமைந்தது. ஆனால், இதை தவிர்த்து பிற பிளவுகளில் இரு தலைவர்களும் சம தலைவர்களாக இருந்ததால் இரு சக்திகளுக்குமே சம வாக்குகள் கிடைத்தன. அதேபோல, இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் அடுத்து வரும் 2024 மக்களவைத் தேர்தலில் இருவருக்குமே வாக்கு வலிமை கிடைக்கும்.   அதில் அதிக வாக்கு எடுப்பவர்கள் திமுகவுக்கு எதிர் அணியில் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த வாய்ப்பு கிடைக்கும். இனி நடக்கும் ஆட்டம் தான் இரட்டை இலை முடங்குமா, நீடிக்குமா என்பதை முடிவு செய்யும்.