‘டை’ அமைப்பின் சார்பில் கிரீன்கான் கருத்தரங்கம்

கோவையில் ‘டை’ அமைப்பின் சார்பாக வர்த்தகம் மற்றும் பூமியை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்த புரிதலுக்காக கிரீன்கான் 2022 என்ற ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் நாடு முழுவதிலும் இருந்து 300 க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர், நிறுவனர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் இந்தியாவின் பேட் மேன் என்று அழைக்கப்படும் அருணாச்சலம் முருகானந்தம் உரையாற்றினார். பருவநிலை மாற்ற முன்னோடிகளுக்கான ஆரம்ப நிலை ஆதரவு, தண்ணீர் பாதுகாப்பு, இயற்கை அழகு, பயிர் கழிவு எரிபொருளால் இயங்கும் பேட்டரிகள், பசுமை கட்டிடங்கள் மற்றும் பருவநிலை கட்டுப்பாட்டு முயற்சிகள் போன்ற பல்வேறு தளங்களில் இருந்து பலர் உரையாற்றினர்.

டை கோயம்புத்தூர் தலைவர் ரஞ்சனா சிங்காஸ், கிரின் கான் குறித்து கூறுகையில்: கிரீன் கான் 2022 என்பது தொழில் மற்றும் சூழலியல் மீதான நமது அர்ப்பணிப்பை புரிந்து கொள்ளவும், ஒருங்கிணைக்கவும் அதற்கான வழியில் செயல்படவும் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு முயற்சியாகும் என்றார்.

நிகழ்வில் நடிகரும், அரசியல் தலைவருமான கமல்ஹாசன் காணொளி மூலம் சிறப்புரை ஆற்றி பேசுகையில்: சுற்றுச்சூழல் மீது அக்கறையும், அதை பாதுகாக்கும் எண்ணமும் கொண்டதாக வியாபாரம், தொழில் இருந்தால் தான் அது நிலைத்து நிற்க முடியும்.

பிரபஞ்சத்தின் வேறு ஒரு மூலையில் வாழ முடியும் என்ற பேச்சுக்கள் பேசினாலும், அது நடக்க குறைந்தது 10 தலைமுறை ஆகும். இருப்பது நமக்கு இந்த ஒரு உலகம் தான் என்று புரிந்துகொண்டு செயல்பட வேண்டும், என்று கேட்டுக்கொண்டார்.