“அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் பயன்பாடு இருக்காது”

இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பெட்ரோல் பயன்பாடு இருக்காது என மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: மாற்று எரிசக்தியை நோக்கி நாடு பயணித்து வரும் சூழலில் இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் தேவை இருக்காது. மகாராஷ்டிரா மாநிலத்தில் விதர்பா மாவட்டத்தில் பயோ எத்தனால் தயாரிக்கப்படுகிறது. இதனை வாகனங்களுக்கு பயன்படுத்தலாம். மேலும், ஆழ் கிணறு நீர் மூலம் பசுமை ஹைட்ரஜன் தயாரித்து ஒரு கிலோ ரூ.70க்கு விற்க முடியும்.

எத்தனால், மெத்தனால், பயோ-டீசல், பயோ சிஎன்ஜி, கிரீன் ஹைட்ரஜன் போன்ற மாற்று எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.115ஆக உள்ள நிலையில், ஒரு லிட்டர் எத்தனாலின் விலை ரூ.64 இருப்பதன் மூலம் பொது மக்களுக்கு எத்தனால் மிக மலிவான எரிசக்தியாக அமையும் எனக் கூறினார்.

அடுத்தாண்டு ஏப்ரல் முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல் பயன்பாட்டில் 20 சதவீதம் எத்தனால் கலந்து பயன்படுத்தும் திட்டத்தை அரசு அறிமுகம் செய்யவுள்ளது.