மு.க ஸ்டாலின் தலைமையில் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு

ஜூலை 4ம் தேதி உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னையில் வரும் ஜூலை 4ம் தேதி உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில் “தமிழகத்திற்கு புதிய முதலீட்டாளர்களை ஈர்க்கக்கூடிய வகையில், ஜூலை 4 ல் சென்னையில் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு காலத்தில், தொழில் துறையில் பெரும் வளர்ச்சியும், மறுமலர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. தொழில் துறையில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் முன்னிலையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. கடந்த ஓராண்டில் 2.26 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமல்லாமல், நிறுவனங்களுடன் கலந்துரையாடி புதிய முயற்சிகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் 132 நிறுவனங்களும் செய்த ஒப்பந்தத்தால் மேலும் 90,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என, கூறினார்.

மேலும், 38 நிறுவனங்களுடன் தமிழகத்தில் தொழில் தொடங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. உலக அளவில் திறன் மேம்பாடு பெரிய உந்து சக்தியாக உள்ளது. “நான் முதல்வன் திட்டத்தின் கீழ்” பல்வேறு தொழில் பயிற்சிகள் மாணவர்களுக்கு அளிக்கப்படும். கோவை மற்றும் மதுரையில் உயர்தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைய இருக்கின்றன என தெரிவித்தார்.