தமிழ்நாடு கேட்டரர்ஸ் அசோசியேஷன் சார்பில் ‘கொங்கு தலைமகன் விருதுகள்’

தமிழ்நாடு கேட்டரிங் (கேட்டரர்ஸ்) அசோசியேஷன் சார்பில் ‘கொங்கு தலைமகன் விருதுகள்’ வழங்கும் நிகழ்ச்சி கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தொழில்முனைவோர்களை சிறப்பிக்கும் விதமாகவும், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் இந்த விருது வழங்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் அரோமா குழுமத்தின் தலைவர் பொன்னுசாமி, மில்கி மிஸ்ட் ஃபுட்ஸ் புரொடெக்ட்ஸ் நிறுவனர் & மேலாண்மை இயக்குனர் சதீஸ் குமார், சக்தி மசாலா இயக்குனர் சாந்தி துரைசாமி, ஏ.எம்.கே கிருஷ்ணா ரைஸ்மில் நிறுவனர் துரைராஜ், மயில்மார்க் சம்பா ரவை இயக்குனர் பாலசுப்பிரமணியன், ஏ.ஜே.கே கலை அறிவியல் கல்லூரியின் செயலாளர் மற்றும் பாரதியார் பல்கலை கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர் அஜித் குமார் லால் மோகன், ஆர்.எஸ்.மருத்துவமனை நிறுவனர், மருத்துவர் செந்தில்நாதன், லட்சுமி கேட்டரிங் சர்வீஸ் நிறுவனர் மாதம்பட்டி தங்கவேலு, சிறகுகள் அமைப்பின் அறங்காவலர் விமல் கருப்பண்ணன்,

ஜே.எம்.ஆர் டெக்கரேட்டர் நிறுவனர் மணிமாறன், தி கோவை மெயில் பதிப்பாளர்/ஆசிரியர் கே.சி. சீனிவாசன், சமையல் கலை நிபுணர் திருநங்கை மதனா அம்மா, தேக்கம்பட்டி சிவக்குமார் கபடி அணி தேக்கம்பட்டி சிவகுமார், போட்டோ டுடே இயக்குனர் சுரேஷ் ஆகியோர்க்கு கொங்கு தலைமகன் விருதுகள் வழங்கப்பட்டன.

முன்னோர்களின் மரபை பின்பற்றுங்கள்!

– சிரவையாதீனம் இராமானந்த குமரகுருபர சுவாமிகள்

துவக்க உரையில் பேசியதாவது: தமிழர்களின் பண்பாடு, நாகரிகம், பழக்க வழக்கம் அனைத்தும் மிக தொன்மையானது.  தமிழர்களின் விருந்து முறை பற்றி அவர் கூறுகையில், நமது முன்னோர்கள் நள்ளிரவில் அவர்களது வீட்டிற்கு வரும் முகம் தெரியாத நபர்களுக்கும், முக மலர்ச்சியுடன் மனம் வருந்தாதபடி விருந்து அளிப்பார்கள். நமது முன்னோர்கள் நமக்கு பல நல்ல மரபுகளை விட்டு சென்றுள்ளனர். ஆனால் இன்று அதை கடைப்பிடிக்க மறந்தும், தவறியும் விட்டோம் எனக் கூறினார்.

தற்போதைய கால கட்டத்தில் நடைபெறும் திருமண நிகழ்வுகளில் மேலை நாட்டவர்களின் நின்று கொண்டே  உணவருந்தும் முறையை கடைபிடிப்பதோடு, உணவையும் வீணாக்குகின்றனர். உணவின் அருமையை உணர வேண்டும். ஒரு பொருளை உற்பத்தி செய்வதில் பலரின் உழைப்பு உள்ளது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.

உறவினர்களுடன் கீழே அமர்ந்து மகிழ்வுடன் உணவு உண்பது தான் நமது மரபு. ஆனால் அந்த வழக்கத்தை இப்போது காண முடிவதில்லை என்றார்.

ஒரு பகுதியின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப எந்த பயிர், காய்கறி விளைகிறதோ அதை தான் அந்தப் பகுதி மக்கள் உணவாக உண்ண வேண்டும்.

எதற்காக வாழ்கிறோமோ, எதற்கு உழைக்கின்றமோ அதை உணராமல் வேகமாக எதை நோக்கியோ ஓடி கொண்டிருக்கிறோம். மேலும் எதை தேடி ஓடுகிறோம் என்பதே தெரியாமலும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அவசரத்துடனும், பரபரப்புடனும் உண்ணாமல் சுற்றத்தாருடன், குழந்தைகளுடன் மனம் மகிழ்ந்து உண்ண வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

மேலும், தமிழ்நாடு கேட்டரிங் அசோசியேஷன் சார்பில் தமிழகம் முழுவதும் பெருமை பெற்ற தொழிலதிபர்களை கவுரவிக்கும் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.

கொங்கு மண்ணிற்கே உரியது உபசரிப்பு!

– வனிதா மோகன், தலைவர், பிரிக்கால் லிமிடெட் 

வாழ்த்துரை வழங்கி உரையாற்றுகையில்: ஒருவரின் மனம், உடல் ஆகியவற்றை குளிர்விக்கும் உணவு கலையை தெய்வீக கலை என்றே கூறலாம். அந்த உணவு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது பெருமை அளிப்பதாக தெரிவித்தார்.

அனைவருக்கும் எளிதாக சமையல் வந்து விடாது. ஒரு சிலருக்கு மட்டும் தான் சமையல் கலை வரும். எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும் சமையல் அங்கு முதன்மையான இடத்தைப் பெறும். உணவு பரிமாறும் போது உள்ளத்தில் அன்போடு உணவை ஒருவருக்கு பரிமாற வேண்டும். மேலும் உபசரிப்பு என்பது கொங்கு மண்ணிற்கே உரியது எனக் கூறிய அவர், இந்த மண்ணிற்கு என்று தனித்த உணவு சுவையும் உண்டு எனக் கூறினார்.

எந்தவொரு நிகழ்விலும் தங்களை முன்னிலைப்படுத்தாமல் சமையல் அறைக்குள் இருந்து, அந்த நிகழ்வு சிறப்புடன் முடிய காரணமாக இருப்பவர்கள் உணவு கலைஞர்கள். மேலும், உயிர்களின் அடிப்படையே உணவு தான், உணவு இல்லாமல் எந்த உயிரினமும் வாழ முடியாது என்றார்.

வருங்காலத்துக்கும் சமையல் கலை சேரவேண்டும்!

– செஃப் தாமு, பிரபல சமையல் கலை நிபுணர்

தனது தலைமை உரையில் பேசுகையில்: இனி வரும் வருங்கால தலைமுறையினருக்கும் சமையல் கலையை கற்றுத்தர வேண்டும் என்ற வேண்டுகோளை நிகழ்வில் கூடியிருந்த கேட்டரிங் சங்க உறுப்பினர்களிடம் முன்வைத்தார். மேலும் ஒரு உணவின் சுவை உண்டு முடித்து கை கழுவும் போதுதான் வெளிப்படும் என்றார்.

தொழில்முனைவோர்களை பெருமை படுத்தும் இந்த கொங்கு தலைமகன் விருதை வழங்குவதின் மூலம் தான் பிறந்த பயனை அடைந்ததாக நிகழ்ச்சியில் பெருமிதம் படப் பேசினார்.