நுபுர் சர்மா மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு

பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா முகமது நபிகள் பற்றி கூறிய கருத்துக்களால் நாட்டில் பதற்றத்தைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டிய உச்ச நீதிமன்றம், நுபுர் சர்மா முழு நாட்டிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என, அறிவித்தது.

உச்ச நீதிமன்றம் விடுத்த அறிவிப்பில் தெரிவித்ததாவது, ” ஒரே ஒரு தனிநபராக இருந்து கொண்டு ஒட்டுமொத்த நாட்டையே கடும் பதற்றத்தில் ஆழ்த்திவிட்டார் நுபுர் சர்மா. இவரின் வார்த்தைகளால் இன்று நாட்டையே கலவரத்தில் ஆக்கியுள்ளார்.

முகமது நபிகள் விவகாரத்தில் நுபுர் சர்மா நடந்துகொண்டதும் அதனைத் தொடர்ந்து அவரின் வழக்கறிஞர்கள் சொல்வதும் வெட்கக்கேடானது. நுபுர் சர்மா முழு நாட்டிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

மேலும், “நுபுர் சர்மாவுக்கு எதிராக பல இடங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டால் அவர் உடனடியாக கைது செய்யப்படுவார். ஆனால், நாட்டில் பல கலவரங்களுக்கு காரணமான நுபுர் சர்மாவை யாரும் கைது செய்ய துணியவில்லை.

நுபுர் சர்மாவின் கருத்துகள் என்பது பிடிவாதமான மற்றும் திமிர்பிடித்த தன்மையை காட்டுகின்றன. ஒரு கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருப்பதால் தனக்கு அதிகாரம் இருப்பதாக அவர் நினைக்கிறார். நாட்டின் சட்டத்தை மதிக்காமல் அவரால் இது போல பேச முடியுமா” என்று நீதிபதிகள் கடுமையாக கேள்வி எழுப்பினர்.