மாநில ஜி.எஸ்.டி. தீர்ப்பாயம் ஏற்படுத்தப்படும் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

தொழில்துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முதலமைச்சர் ஸ்டாலின் சீரிய முறையில் நடவடிக்கை எடுத்து வருவதாக கோவையில் தொழில் முனைவோர் மத்தியில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஜி.எஸ்.டி. சேவை மையத்தில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தொழில் முனைவோருக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்படும்‌. மதுரையில் அடுத்த ஜி‌.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் தற்போது 100 பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரி குறித்து மதுரை ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும். மேலும், தொழில்துறையினரின் கோரிக்கைகளும் அந்த கூட்டத்தில் முன்வைக்கப்படும் என தெரிவித்தார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் சென்று சேராததால் 80 சதவீத நிதி முழுமையாக தொழில் முனைவோரை சென்று சேரவில்லை எனவும், ஜி.எஸ்.டி.யில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண மாநில ஜி.எஸ்.டி. தீர்ப்பாயம் ஏற்படுத்தப்பட இருப்பதாகவும் கூறினார்.

தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு தொழில் நிறுவனங்கள் அருகே தங்கும் விடுதிகள் அமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.