மண்ணில் போகும் உடல் உறுப்பு மனிதனுக்கு பயன்படட்டும்!

கோவையின் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றான பி.எஸ்.ஜி மருத்துவமனையில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை கடந்த ஜூன் 21 ஆம் தேதி நடைபெற்றது. இது மிகவும் சிக்கலான இதய மாற்று அறுவை சிகிச்சை எனவும், மருத்துவக் குழுவினரின் ஒத்துழைப்பாலும், தகுந்த நேரத்தில் கொடையாளியிடம் இருந்து இதயம் கிடைக்கப் பெற்றதாலும் இந்த சிகிச்சையை வெற்றிகரமாக செய்ய முடிந்ததாக பி.எஸ்.ஜி மருத்துவக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் பிரதீப், இருதய அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் முருகேசன், மூத்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆனந்த நாராயணன், மினிமலி இன்வேசிவ் கார்டியோ தொராசி அறுவை சிகிச்சை நிபுணர் சிவக்குமார், கார்டியாக் கிரிட்டிகல் கேர் பிரிவின் தலைவர் மற்றும் டாக்டர் கணேசன் ஆகியோர் இந்த இருதய மாற்று அறுவை சிகிச்சையை செய்தனர்.

இது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு பி.எஸ்.ஜி மருத்துவமனையில் நடைபெற்றது. அப்போது மருத்துவக் குழுவினர் பேசியதாவது:

கரூரை சேர்ந்தவர் ஆனந்த், இவருக்கு வயது 40. கடந்த 5 வருடமாக இதய பாதிப்பின் காரணமாக மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் அவர் பி.எஸ்.ஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்திருந்தார். அப்போது அவரது இதயத்தின் இயக்கம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. சிகிச்சைகள் அளிக்கப் பட்டபோதிலும் இதய இயக்கம் சீரான நிலைக்கு திரும்பவில்லை. இதய பிரச்சனையினால் அவருக்கு பிற உறுப்புகளும் பாதிப்படைய ஆரம்பித்தன.

இதனால் அவருக்கு உடனடியாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்வது ஒன்றே தீர்வாக இருந்தது. ஆனால் நோயாளி அறுவை சிகிச்சை செய்ய பெரிதும் தயக்கம் காட்டினார். இதுகுறித்து குடும்ப உறுப்பினர்களிடம் கலந்தோலோசிக்குமாறு கூறியிருந்தோம். இந்நிலையில் அவர் இதயம் மிகவும் பாதிப்படைந்த நிலையில் கார்டியாக் அர்ரெஸ்ட் ஏற்பட்டு உயிர்போகும் தருவாயில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தருணத்தில் தான் அவரது குடும்பத்தினர் நோயாளியின் நிலையை உணர்ந்து இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தனர்.

மேலும், இந்த சிகிச்சையின் போது அவருக்கு எந்த தொற்று பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதற்காக அவரை வீட்டு கண்காணிப்பில் இருக்குமாறு அறிவுறுத்தி இருந்தோம். ஆனால் சில அவசர காரணத்தினால் அவர் வெளியூர் சென்ற போது அங்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு விட்டது. அங்கு ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் எங்கள் மருத்துவக் குழுவினரின் வழிகாட்டுதலில் அங்கு அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டதோடு, நாங்களும் அங்கு விரைந்தோம். அதன் பின் உரிய மருத்துவ பாதுகாப்போடு பி.எஸ்.ஜி க்கு அவரை கொண்டு வந்தோம்.

இந்த சமயத்தில் கொடையாளியிடம் இருந்து இதயத்தை எதிர்பார்த்திருந்த நிலையில், விபத்தில் மூளை சாவடைந்த இளைஞர் ஒருவரின் இதயத்தை தானமாக கொடுக்க அவரது பெற்றோர் முன்வந்தனர். பின்னர் அனைத்து மருத்துவ குழுவினரின் ஒருங்கிணைந்த முயற்சியால் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் விரைவில் வீடு திரும்ப உள்ளார் என பி.எஸ்.ஜி மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில், பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கோபால கிருஷ்ணன், மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ஜெ.எஸ். புவனேஸ்வரன் கலந்து கொண்டனர்.

உறுப்பு தான விழிப்புணர்வு அவசியம்:

உறுப்பு தானத்தின் அவசியம் குறித்து மருத்துவர்கள் கூறுகையில்: பல நோயாளிகள் உறுப்பிற்காக பதியப் பெற்று காத்திருக்கின்றனர். ஆனால் கொடையாளிகள் மிகவும் குறைவு. மூளை சாவடைந்த ஒருவரால் 10 உயிர்களை காப்பற்ற முடியும். உடல் உறுப்பு தானத்தின் தேவை தற்போது மிகவும் அதிகரித்துள்ளது. குறிப்பாக இதயம், நுரையீரல், சீறுநீரகம் போன்ற உறுப்புகள் ஒருவருக்கு பழுதடைந்து மாற்று உறுப்பு தேவைப்பபடும் போது, மூளை சாவடைந்த கொடையாளியின் உறுப்பை உறவினர்கள் தானமாக அளிக்க முன்வந்தால் தான் அவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்கும். இது குறித்த விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட வேண்டும்.

இந்திய அளவில் உறுப்பு தானம் செய்வதில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது. ஆனால் உறுப்பு மாற்று சிகிச்சை குறித்த போதிய விழிப்புணர்வு இன்மையால் மக்களிடம் அறியாமை நிலவுகிறது. மேலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை பொறுத்த அளவில் கொடையாளியின் வயது இதற்கு தடையில்லை. உறுப்பின் ஆரோக்கியமே முதன்மையானது என குறிப்பிட்டு பேசினார்.