நான் ரெடி நீங்க ரெடியா? ஓ.பி.எஸ் கடிதம்

உள்ளாட்சி இடைத்தேர்தலில் விண்ணப்ப படிவத்தில் கையெழுத்திட ஓ.பி.எஸ் தயாராக இருப்பதாகவும், இ.பி.எஸ் கையெழுத்திட தயாரா என கடிதத்தில் கேட்டுள்ளார் ஓ.பி.எஸ். அந்த கடிதத்தில் கையெழுத்திடாமல் இ.பி.எஸ் நிராகரித்து விட்டார்.

நீயா… நானா… என்ற போட்டியில் அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்து வருகிறது. எடப்பாடி பழனிச்சாமியின் பக்கம் ஆதரவாளர்கள் நிறைந்த வண்ணம் இருக்கின்றனர். ஆனால், ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக பல நிர்வாகிகள் உள்ளனர். “என் பக்கம் தான் தொண்டர்கள் இருக்கிறார்கள்” என்று ஓ.பி.எஸ்ம். “இல்லை… இல்லை… அவர்கள் எல்லோரும் என் பக்கம் தான்” என்று இ.பி.எஸ்ம் போடும் சண்டையால் அதிமுக கட்சி பிளவு படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஒற்றைத்தலைமைப்பதவிக்காக இவர்கள் போடும் போட்டியால் கட்சியின் சின்னமும், கொடியும் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதில் தேர்தல் நடைபெறவுள்ள 510 பதவிகளில் 34 பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறவுள்ளதால், வேட்பாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் கட்சிகளின் சின்னத்தை ஒதுக்க உள்ளது.

இது தொடர்பாக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியிருப்பதாவது, ‘உள்ளாட்சி இடைத்தேர்லில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சி சின்னத்தை பயன்படுத்த வேண்டும். ஆகையால், இந்த படிவத்தில் கையெழுத்திட ஒருங்கிணைப்பாளராக நான் தயாராக உள்ளேன், இணை ஒருங்கிணைப்பாளரான நீங்க தயாரா? என்று, ஓ.பி.எஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த படிவத்தில் ‘ஏ’ மற்றும் ‘பி’ பார்ம் இரண்டிலும் நாம் இருவரும் கையெழுத்திட்டால் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும்.

இந்த தேர்தலில்போட்டியிடும் வேட்பாளர்கள் நாளை பிற்பகல் 3 மணிக்குள் படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட தவறினால் தொண்டர்கள் மீது அக்கறை கொண்ட தலைவர் யார் என்பதை அதிமுக தொண்டர்கள் புரிந்து கொள்வார்கள் என்றும் அந்த கடிதத்தில் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

ஆனால், ஓபிஎஸ் அனுப்பிய கடிதத்தை இபிஎஸ் வாங்க மறுத்துவிட்டார். இதனையடுத்து அந்த கடிதம் மீண்டும் ஓபிஎஸ்க்கு திருப்பி அனுப்பி ஒப்படைக்கப்பட்டது.