சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரங்கள்; லட்சக்கணக்கில் குவியும் புகார்கள்

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தால், லட்சக்கணக்கில் குவியும் புகார்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள அகத்திஸ்வரா் திருக்கோவில் குளத்தை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டபோது, ‘அகதீஸ்வரர் கோவில் குளம் பற்றி வந்த தகவல்களின் அடிப்படையில் ஆய்வு செய்து, சென்னை மாநகராட்சி இந்த குளத்தை மேம்படுத்தும் பணியை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தற்போது, இந்த ஆய்வின் அடிப்படையில், இந்த குளத்தைத் கோவில் குளமாகவே வடிவமைக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாக கூறினார். மேலும், நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உள் வாங்கிக்கொண்டு, பணிகளை வேகமெடுக்க உள்ளோம். அடுத்த முறை அந்த வழக்கு வரும்போது பணிகள் இருக்கும் நீதிபதிகள் மகிழ்ச்சி அடைவார்கள் என, கூறினார்.

மேலும், அனைத்து கோவில் குளங்களை படிப்படியாக மேம்படுத்தப்பட்டு, விரைவில் அனைத்து குளங்களின் சீரமைப்பு பணிகள் முடிக்கப்படும் எனவும் கூறினார்.

இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் சட்டத்திற்குப் புறம்பாக நடைபெறுவதாக பல லட்சம் புகார்கள் வருவதாகவும், புகார்களின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் இந்த விவகாரம் தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை ஒவ்வொரு அடியும் பார்த்து அறிந்து செயல்படுவதாகவும் தெரிவித்தார்.