ஆற்றல் அறக்கட்டளை சார்பில் அரசு பள்ளி புதுப்பிப்பு

ஈரோடு மாவட்டத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஆற்றல் அறக்கட்டளை சார்பில் ஈரோட்டில் 2 அரசு பள்ளிகள் புதுப்பிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அறக்கட்டளை தலைவர் அசோக் குமார் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.

ஈரோடு மாவட்டம் திண்டல் மாநகராட்சித் தொடக்கப் பள்ளியில் வகுப்பறை கட்டிடம் சீரமைத்தல், வகுப்பறைக்கு டைல்ஸ் தரை தளம் அமைத்தல் மற்றும் மாணவியர்கள் பயன்படுத்தும் கழிவறையை சீரமைத்தல் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்காக ஒப்படைக்கப்பட்டது. இதனை மேயர் நாகரத்தினம் திறந்து வைத்தார்.

இவ்விழாவில் வார்டு எண் 30 கவுன்சிலர் கீர்த்தனா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜோதிமணி, பள்ளி வட்டார கல்வி அலுவலர் சந்தியா, பள்ளியின் தலைமையாசிரியர் புனிதவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மொடக்குறிச்சி பகுதிக்கு உட்பட்ட கொடுமுடி பேரூராட்சியில் அமைந்துள்ள அரசு ஆரம்பப் பள்ளியின் கட்டிடத்தை ஆற்றல் பவுண்டேஷன் குழு புதுப்பித்து பயன்பாட்டிற்காக ஒப்படைத்தது. இதனை பேரூராட்சி தலைவர் திலகவதி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேரூராட்சித் துணைத் தலைவர் ராஜகமலஹாசன், வார்டு உறுப்பினர்கள், பள்ளியின் தலைமை ஆசிரியர் இளங்கோ, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கமலா, பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் மணி மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் கஸ்தூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.