பாதுகாப்பற்றதாக மாறும் காந்திபுரம் பேருந்து நிலையம் – நடவடிக்கை எடுக்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

கோவை காந்திபுரம் பேருந்து நிலையம், இரவு நேரங்களில் பாதுகாப்பற்றதாக மாறிவிட்டது என்வும், பாதுகாப்பை பலப்படுத்த இரவு நேரங்களில் காவல் துறை ரோந்து பணியில் அதிக காவலர்களை ஈடுபடுத்த வேண்டும் எனவும் பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தலைநகர் சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய தொழில் மாநகரம் கோவை. தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்கள், பிற நாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் தினமும் கோவை மாநகருக்கு வந்து செல்கின்றனர்.

கோவையில் மிகமிக முக்கியமான இடமாக இருப்பது காந்திபுரத்தில் உள்ள உள்ளூர், வெளியூர் பேருந்து நிலையங்கள்தான். உள்ளூர், வெளியூர் பயணிகள் காந்திபுரம் பேருந்து நிலையம் வழியாக கோவைக்குள் நுழைகின்றனர். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்கும் செல்கின்றனர். கோவையில் ஓடும் பெரும்பாலான பேருந்துகள் இங்கிருந்துதான் இயக்கப்படுகின்றன.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பேருந்து நிலையம், இரவு நேரங்களில் பாதுகாப்பற்றதாக மாறிவிட்டது அதிர்ச்சி அளிக்கிறது. இப்போதெல்லாம் இரவு, பகல் என்று நேரம் காலம் இல்லாமல், பெண்கள் குறிப்பாக கல்லூரி மாணவிகளும் பயணிக்க வேண்டியுள்ளது. பேருந்து நிலையங்கள் பாதுகாப்பானவை, ஆபத்து இல்லாதவை என்ற நம்பிக்கையில்தான் பெண்களும், மாணவிகளும் பயணிக்கின்றனர். அவர்களது குடும்பத்தினரும் அனுப்பி வைக்கின்றனர்.

ஆனால், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் சில தனியார் பேருந்து ஓட்டுநர்கள், மது போதையில் பணிக்கு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். போதையில் இருக்கும் ஓட்டுநர்கள் தன்நிலை மறந்து அவ்வப்போது பயணிகளுடன் தகாராறில் ஈடுபடுகின்றனர். இதனால், பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் அச்சமடைந்துள்ளனர். பயணிகளைத் தாக்குவதும், கண்ணியக் குறைவாக நடந்து கொள்வதும் அதிகரித்துவிட்டன. சில நாட்களுக்கு முன்பு அரசுப் பேருந்து ஊழியர்கள் தாக்கப்பட்டதால், அவர்கள் பேருந்துகளை நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

இரவு நேரங்களில் சமூக விரோதிகள் தொல்லையும் அதிகரித்துள்ளதாகவும், பணம் கேட்டு மிரட்டுவது, கழிவறைகளில் அதிக கட்டணம் வசூலிப்பது என்று பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாகவும் கோவை தெற்கு சட்டப் பேரவை தொகுதி அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

எனவே, கோவை மாநகராட்சி, மாநகர காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் தலையிட்டு, காந்திபுரம் பேருந்து நிலையங்களில் இரவு நேர பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். இரவு நேரங்களில் காவல் துறை ரோந்து பணியில் அதிக காவலர்களை ஈடுபடுத்த வேண்டும். மது குடித்துவிட்டு பணிக்கு வரும் ஓட்டுநர், நடத்துநர்கள் மீதும், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை மாநகரின் பாதுகாப்பில் அலட்சியம் கூடாது என வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.