ஏன் இருட்டில் தூங்க வேண்டும்?

மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு எவ்வளவு முக்கியமோ, உறக்கமும் அதே அளவு முக்கியம். அன்றாடம் நாம் செய்யும் பல வேலைகளுக்கு பின்பு உடலும், மனமும் ஓய்வு பெற ஒரு மனிதருக்கு தூக்கம் இன்றியமையாத ஒன்று. குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் வரை ஒருவருக்கு உறக்கம் அவசியம்.

உடலில் அல்லது மனதில் எந்த பிரச்சினை இருந்தாலும், அதற்கு உறக்கம் ஒரு தீர்வாக இருக்கும் என்று மருத்துவ வல்லுநர்களால் கூறப்படுகிறது.

ஆனால் தூக்கத்தில் நாம் செய்யும் சில தவறுகளே, சில உடல் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கிறது. இரவு நேரங்களில் வெளிச்சத்திலேயே இருந்தால் உடற்பருமன், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நார்த் வெஸ்ட் மெடிஸினின் சமீபத்திய ஆய்வு கூறுகிறது.

அதிலும் இளைஞர்களை ஒப்பிடுகையில் வயதானவர்களுக்கு, குறிப்பாக 63 முதல் 88 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு இந்த பிரச்சினை அதிகளவு ஏற்படுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

மணிக்கட்டில் அணியக் கூடிய தொழில் நுட்ப சாதனங்களை கொண்டு 7 நாட்களுக்கு ஒளி விழிப்பாட்டு அளவை கணக்கிட்டு இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது. இது ஆராய்ச்சிக்காக செயற்கையாக நடத்தப்படாமல் தினசரி வாழ்வில் நிஜத்தை வைத்து எடுக்கப்பட்ட ஆய்வு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அதிக உடற்பருமன், உயர் ரத்த அழுத்தம், மற்றும் வயதானவர்களுக்கு ஏற்படும் நீரிழிவு ஆகியவற்றுடன் தொடர்பு உடையது.

குறிப்பாக இரவு நேரத்தில் வெளிச்சம் என்பது மொபைல், இரவு முழுவதும் தொலைகாட்சியை ஓடவிடுவது அல்லது வெளிச்ச மாசுபாடு நிறைந்த நகரம் போன்றவற்றையும் குறிக்கும்.

பொதுவாக வயதானவர்களுக்கு நீரிழிவு மற்றும் இதய சார்ந்த நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இவர்கள் வெளிச்சத்தில் இருக்கும் போது அது, எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை கணக்கிடவே இந்த ஆய்வு என்று நார்த் வெஸ்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவர் கூறுகிறார்.

இந்த ஆராய்ச்சியில் மொத்தம் 552 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதில் பாதிக்கும் குறைவானவர்களே 5 மணி நேரத்திற்கு வெளிச்சம் இல்லாமல் இருந்திருக்கின்றனர். மற்ற அனைவரும் அந்த 5 மணி நேரத்தில் ஏதேனும், சிறிய அளவிலான வெளிச்சத்தை தேடி இருக்கின்றனர் என இவ்வாய்வு கூறுகிறது. இருப்பினும் இது ஒரு கிராஸ் செக்ஷனல் ஆய்வு என்பதால் உடற்பருமன், நீரிழிவு, மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருப்பதால் தான் வெளிச்சத்தில் தூங்க வேண்டும் என்று தூண்டப்படுகிறார்களா அல்லது வெளிச்சத்தில் தூங்குவது தான் இந்த பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறதா என்பது பற்றி ஆராய்ச்சியாளர்கள் இன்னும் தெளிவுக்கு வரவில்லை.

மேற்கூறிய பிரச்சினை உள்ளவர்கள் வெளிச்சத்தில் தூங்கும் போது, இடை இடையே பாத்ரூம்க்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம். இதனாலேயே விளக்கை அணைக்காமலேயே வைத்திருப்பவர்களும் உண்டு. நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு அடிக்கடி கால் மரத்து போவதால் இரவு நேரங்களில் தடுமாறி கீழ விழாமல் இருக்கவும் விளக்கை அணைக்காமல் வைத்திருப்பவர்களும் உண்டு. இருப்பினும் இரவு நேரங்களில் வெளிச்சத்தை தவிர்ப்பது மிக முக்கியம். முடியாவிட்டால் வெளிச்சத்தின் அளவையாவது குறைத்து கொள்ளலாம் என்கிறது ஓர் ஆய்வு.

zee மற்றும் அதன் சார்பு குழுக்கள், இயற்கை வெளிச்சம், இருட்டு இந்த சுழற்சியை மட்டுமே பயன்படுத்துவது ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறதா என்றொரு மற்றொரு ஆய்வை மேற்கொண்டு வருகிறது. தூங்கும் போது வெளிச்சத்தை குறைப்பதற்கான சில எளிய வழிகளை முடிந்த அளவு பின்பற்றலாம் என zee ஆய்வாளர்கள் அறிவுரை கூறுகின்றனர்.

அதன்படி, இரவு நேரங்களில் விளக்கை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. வயதான பெரியவர்களுக்கு வெளிச்சம் தேவைப்பட்டால் மிகவும் மங்கலான தரையுடன் ஓட்டிய விளக்குகளை பயன்படுத்தலாம்.

அதில், மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு நிற விளக்குகள் மூளையின் இயக்கத்தை சிறிதளவே தூண்டுகிறது. வெள்ளை அல்லது நீல நிற விளக்குகளை தவிர்த்திடலாம். தூங்கும் போது விளக்குகள் சற்று தூரத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சிலரது வீடுகளில் இரவு நேரங்களில் வெளிப்புற வெளிச்சம் ஜன்னல் வழியாக வரலாம். அதனை தவிர்க்க முடியாத பட்சத்தில் கண் மாஸ்குகளை பயன்படுத்தலாம். முடிந்தவரை அதிக வெளிச்சம் படாத இடத்தில் படுக்கையை அமைப்பது சிறந்தது.

 

Source: Puthiya thalaimurai