கவுண்டம்பாளையத்தில் 2 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க திட்டம்

– மாநகராட்சி கமிஷனர் தகவல்

கோவை கவுண்டம்பாளையத்தில் கூடுதலாக 2 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது என மாநகராட்சி கமிஷனர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி சார்பில் கோவை உக்கடத்தில் ரூ.17 கோடி செலவில் சூரிய ஒளி மூலம் 3.6 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் மின் கட்டணத்தை குறைக்கும் வகையில் தெரு விளக்குகள் அனைத்தும் எல்.இ.டி. விளக்குகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இதுதவிர ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் குளங்கள் புனரமைப்பின் போது அமைக்கப்படும் நிழற்குடையின் கூரையில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை வைத்து அங்குள்ள அலங்கார விளக்குகள் எரிய வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள பழைய குப்பை கிடங்கில் தற்போது 1 மொவாட் மின்சாரம் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு ரூ.12 கோடி செலவில் கூடுதலாக 2 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய மாநகராட்சி முடிவு செய்து உள்ளது. இதற்காக இங்கு 7.6 ஏக்கர் பரப்பளவில் 5,333 சூரிய ஒளி தகடுகள் பொருத்தப்பட உள்ளன. இந்த மின்உற்பத்தி நிலையம் செயல்பாட்டிற்கு வந்தால் மாநகராட்சிக்கு ஆண்டிற்கு பல லட்சம் ரூபாய் மின் கட்டணம் மிச்சமாகும்.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறியதாவது: கோவை மாநகராட்சியில் புதுப்பிக்கதக்க மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்மூலம் புதுப்பிக்க முடியாத எரிசக்தியை சார்ந்திருப்பதை தவிர்ப்பதோடு, மாநகராட்சியின் மின்கட்டணமும் குறையும்.

மாநகராட்சி சார்பில் தற்போது 5 மெகாவாட் அளவிற்கு சூரியஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து கவுண்டம்பாளையத்தில் கூடுதலாக 2 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தபுள்ளி கேட்டு உள்ளோம். ஒப்பந்தபுள்ளி இறுதி செய்யப்பட்டதும் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்படும் எனக் கூறினார்.