அஞ்சல் துறை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அரசுத் துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கி, அதன் மூலம் லாபம் சம்பாதிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் தான் அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. அதேபோல, எல்.ஐ.சி. உள்ளிட்ட சில நிறுவனங்களின் பங்குகளையும் தனியாரிடம் விற்பனை செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அஞ்சல் துறையும் தனியார் மயமாக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதுபோன்ற சூழலில், அஞ்சல் துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து கோவை மாவட்டத்தில் அஞ்சல் துறை மற்றும் ஆர்.எம்.எஸ். ஊழியர்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை தபால் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அஞ்சல் துறையை தொடர்ந்து சேவைத் துறையாக நடத்த வேண்டும் எனவும், அஞ்சல் கணக்குகளை இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் வங்கியிடம் ஒப்படைப்பதை தடுக்க வேண்டும் எனவும் முழக்கமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கோட்ட செயலாளர்கள், மண்டல செயலாளர்கள், அமைப்பு தலைவர்கள், அஞ்சல் துறை சார்ந்த ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

மேலும், அஞ்சல் பகுதிகளில் வெளியாட்கள் நியமனத்தை தடுத்திட வேண்டும்.  MMS பகுதியில் மெயில்வேன்களை முறையாக பராமரிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. டிரைவர் மற்றும் தொழில் துறையினர் பதவிகளை நிரப்ப வேண்டும், அஞ்சல் துறையில் அனைத்து பிரிவுகளிலும் தனியார்மயம் நுழைவதை தடுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.