அண்ணாமலை சந்திப்பில் பின்புலம்  என்ன?

சென்னையில் அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதிமுக நிர்வாகிகள் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒற்றை தலைமைக்கு  ஆதரவு அளித்தனர். அதனைத்தொடரந்து, ஓ.பன்னீர் செல்வம் பொதுக்குழு கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது பாதியிலேயே வெளிநடப்பு செய்தார்.

இந்நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திடனும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி ஆகியோர்  சந்தித்து பேசினர்.

குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்முக்கு ஆதரவு கோரி இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக பொதுக்குழு நடந்து முடிந்த சில மணி நேரத்திற்குள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சல சலப்பு ஏற்பட்டது.

பாஜகவின் சந்திப்புக்கு பின்னர், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,  அதிமுகவில் பாஜகவின் தலையீடு எப்போதும் இருந்தது இல்லை. பாஜக எப்போதும் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட்டதும்  இல்லை. குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க கோரி தான், பாஜக மேலிடத் தலைவர்கள் வந்தார்கள். குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக அதிமுக முக்கிய நிர்வாகிகள் முடிவெடுப்பார்கள் என்று தெரிவித்தார்.